பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நவகாளி யாத்திரை


ஜோலிகளில் ஒன்றாகும். மற்றபடி மகாத்மாஜியின் சுற்று வேலைகளைக் கவனிப்பதற்கும், அவருக்கு வேண்டிய பணிவிடைகள் புரிவதற்கும் அவருடைய பேத்தி மதுகாந்தி அவருடனேயே தங்கியிருக்கிறார். எனவே, மகாத்மாஜியோடுகூடத் தவிர்க்க முடியாத ஒரு சில குறிப்பிட்டி நபர்கள் மட்டுமே யாத்திரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பத்திரிகை நிருபர்கள் முகாமில் சுமார் ஆறு ஏழு பேர் இருந்தார்கள். எல்லோரும் வங்காளியும், ஹிந்தியும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே தமிழ் தெரிந்த நிருபர் ஒருவரும் இருந்தார். அந்த இடத்தில் தமிழ் பேசத் தெரிந்தவரைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்தான் அமெரிக்கப் பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பும் யூ. பி. நிருபர் என்று அருகிலிருந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேற்படி யு. பி. நிருபரை அணுகிப் பெயர் என்னவென்று விசாரித்தேன். மாணிக்கவாசகம் என்று பதில் இறுத்தார். நண்பர் மாணிக்கவாசகத்தின் மூலம் மகாத்மாஜி யாத்திரை சம்பந்தமான பல விவரங்களையும், நவகாளி ஜில்லாவிலே நடந்த கோர சம்பவங்களைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதற்குள் மணி நாலே முக்கால் ஆகிவிட்டது. "இன்னும் கால் மணி நேரத்தில் மகாத்மா பிரார்த்தனைக்குக் கிளம்பிவிடுவார்; நாமும் அவருடன் செல்லத் தயாராக இருக்க வேண்டும்" என்று எச்சரித்தார் மாணிக்கவாசகம்.

'அச்சா குத்தா!'

மகாத்மாஜி தங்கியிருந்த குடிலுக்கு அருகில் போய் அந்த மகானுடைய புறப்பாடுக்காகக் காத்திருந்தோம்.