பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நவகாளி யாத்திரை


தாங்கவில்லை; காரணம், எல்லாம் சிகரெட் பாக்கெட்டுகள்!

“உயர்ந்த சிகரெட்டுகளைக் கண்டால் நேருஜிக்கு ரொம்பப் பிடிக்கும். ஆகையால், இந்த சிகரெட்டுகளை ஜாக்கிரதையாக வைத்திருந்து நேருஜி இங்கே வரும்போது அவரிடம் கொடுக்கப் போகிறேன்“ என்று மகாத்மா அன்பும், மகிழ்ச்சியும் பொங்கக் கூறினார்.

பின்னர், மறுபடியும் பெட்டிக்குள்ளே கையை விட்டார். வாசனை சோப்புகளும், தந்தத்தில் தயார் செய்யப்பட்ட சீட்டுக்கட்டு ஒன்றும் வந்தன.

“இதெல்லாம் எனக்கு உபயோகமில்லை; சீட்டாடவும் எனக்குத் தெரியாது“ என்று வருத்தப்பட்டுக் கொண்டே மறுபடியும் பெட்டிக்குள் கையை விட்டார். இந்தத் தடவை 'ஷேவிங் ஸெட்' ஒன்று வந்தது!

“இது எனக்கு ரொம்பவும் அவசியமானது. ஆகவே, இதை நானே வைத்துக் கொள்ளப் போகிறேன்“ என்று சொல்லி அதை எடுத்துப் பத்திரமாகத் தமது மடிக்குள்ளே வைத்துக்கொண்டார். மகாத்மாஜி அன்று முதல் தமது அந்திம காலம் வரை மேற்படி ஷேவிங் ஸெட்டைத்தான் உபயோகித்து வந்தார்.

மகாத்மாவைப் பற்றிய பல அபூர்வ சம்பவங்களைப் பற்றியும், அவர் தமது யாத்திரா மார்க்கத்தில் கண்டு வந்த பல முக்கிய காட்சிகளைப் பற்றியும் அங்குள்ளவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். காந்தி மகாத்மாவின் கதைகளைக் கேட்கக் கேட்க மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றியது.