பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

நவகாளி யாத்திரை


சம்பந்தப்பட்ட அனைவரும் நீலக் கதர்ச் சால்வையை மேலே போர்த்திக்கொண்டு பந்தலுக்குள் பிரவேசித்தார்கள். ராஜாஜி, தக்கர்பாபா, சுசீலா நய்யார், பியாரிலால், திரு. சத்தியநாராயணா, கோபால் ரெட்டி முதலியோர் மேடை மீது பிரசன்னமாயிருந்தார்கள்.

ராஜாஜி, பட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து மகாத்மாஜியின் கையில் கொடுக்க, சத்திய நாராயண்ஜி பரீட்சையில் தேறியவர்களின் பெயரை வரிசையாகச் சொல்லி அழைக்க, காந்திஜி அவர்களுக்கெல்லாம் பட்டத்தை வழங்கிக்கொண்டு வந்தார்.

இடையே ஒரு பெண்மணி இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்து மகாத்மாஜியிடமிருந்து பட்டத்தைப் பெற்றுச் சென்றார். அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ராஜாஜி எப்போதோ தம்முடைய பிரசங்கத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது:

"ஸ்திரீகள் பி.ஏ. பட்டம் பெறுவதைக் காட்டிலும் ஒரு குழந்தைக்குத் தாயார் என்ற பட்டம் பெறுவதுதான் முக்கியம்" என்று கூறியிருக்கிறார். ஹிந்தியில் 'விசாரத்' பட்டம் என்பது ஆங்கிலத்தில் பி. ஏ. பட்டம் பெறுவதற்குச் சமானம் என்று கூறப்படுகிறது.

எனவே, இந்தப் பெண்மணி ராஜாஜிக்கு முன்பாக இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்தபோது, "நான் ஏற்கனவே தாயார் பட்டம் பெற்றிருக்கிறேன்; இதோ இப்போது பி. ஏ. பட்டமும் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்" என்று ராஜாஜிக்குப் பதில் கூறுவதைப்போல் இருந்தது.