பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நவகாளி யாத்திரை


ரகசியமாக உட்கார்ந்து கொண்டேன். ஆனால், என்ன அதிசயம்! எனக்கு முன்பாகவே இன்னும் பல பத்திரிகை நிருபர்களும் வேறு பலரும் ரொம்ப ரொம்ப ரகசியமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

ரயிலும் ஊதாமல் கொள்ளாமல் மெளன ரகசியத்துடன் புறப்பட்டு, கிண்டி 'லெவல் கிராஸிங்' பக்கத்தில் போய் மிக மிக ரகசியமாக நின்றது. நாங்கள் இவ்வளவு ரகசியமாகப் போகும் விஷயத்தை மகாத்மாஜியும், ராஜாஜியும் எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு, அங்கே வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று சொல்லி அவர்களையும் ரயிலில் ஏற்றிக் கொண்டோம்.

ரயில் சென்னைக்கு இருபத்தைந்து மைல் தூரத்திலுள்ள காட்டுப்பாக்கத்தில் போய் நின்றதும், நாங்கள் படுத்துத் தூங்குவதற்கு ஆயத்தமானோம். ஆனாலும் ஒருவராவது நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. காரணம்; இவ்வளவு ரகசியமாக நாங்கள் போயிருந்துங்கூட காட்டுப்பாக்கம் ஸ்டேஷன் கொசுக்கள் எங்களை எப்படியோ கண்டுபிடித்து விட்டன!

விடியற்காலம் மணி நாலு அடித்தவுடன் காந்திஜி சரியாகத் துரங்குகிறாரா என்று கவனிப்பதற்காக அவர் ஏறியிருந்த வண்டியினருகில் போய்ப் பார்த்தேன். காந்திஜி உட்கார்ந்தவாறே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ராஜாஜி என்னைக் கண்டதும், "இங்கே எங்கே வந்தாய்?" என்று கேட்டார்.