பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

நவகாளி யாத்திரை


அபிஷேக அர்ச்சனை ஆராதனை எல்லாம் முடிந்த பிறகு, எல்லோருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கினார்கள். கோயில் குருக்கள் மகாத்மாவுக்கும், ராஜாஜிக்கும் தலையில் பெரிய முண்டாசாகக் கட்டிக் கழுத்தில் பூமாலை போட்டுக் கோயில் மரியாதை செய்தார். அப்போது மகாத்மாவும், ராஜாஜியும் அளித்த காட்சியானது சாட்சாத் பழநியாண்டவரே பார்த்து மகிழும்படியாக இருந்தது. ராஜாஜி, காந்திஜி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ஆனந்தம் தாங்கமாட்டாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார்கள். அங்கே இருந்த குருக்கள்மார் முதலிய எல்லோருக்கும் இந்தக் காட்சி பெரிய நகைச்சுவை விருந்தாயிருந்தது!

ஒருவிதமாகப் பழநியாண்டவன் தரிசனம் முடிந்ததும் அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினோம். நான் மட்டும் மெதுவாகக் காந்திஜி ஏறி வந்த பல்லக்கின் பக்கமாகப் போய் நின்றேன். என்னைக் கண்ட ராஜாஜி, "பல்லக்கருகில் உனக்கென்ன வேலை! இதில் மகாத்மாஜி ஏறிச் செல்லப் போகிறார்!" என்றார்.

"பல்லக்கில் ஏறிக்கொள்வதற்காக நான் வரவில்லை. காந்திஜி ஏறிச் செல்லும் இந்தப் பல்லக்கைச் சுமக்கும் பாக்கியம் எனக்கு ஒரு வேளை கிட்டுமா என்று பார்ப்பதற்காகவே வந்தேன்!" என்று மழுப்பிவிட்டு அப்பால் நகர்ந்துவிட்டேன்.

பழநி யாத்திரை 'ஸ்பெஷல்' சென்னைக்குத் திரும்பும்போது தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் பெரும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.