பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நவகாளி நினைவுகள்

1946-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதியன்றுதான் மகாத்மாஜி நவகாளி பயங்கரச் சம்பவங்களைப் பற்றி முதன் முதலாகக் கேள்வியுற்றார்.

அகதிகளின் கண்ணீரைத் துடைக்க அந்த மகான் அக்கணமே தடியை ஊன்றி நவகாளிக்குப் பயணமானார். "நவகாளியில் பூரண அமைதி ஏற்படுகிறவரை நான் அந்த இடத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். இந்தச் சோதனையில் என் உயிர் போயினும் சரியே" என்ற பிரதிக்ஞையுடன் காந்தி மகான் மேற்படி யாத்திரையை மேற்கொண்டார்.

காந்தி மகாத்மாவின் துணிச்சலைக் கண்டு பலர் மனம் கலங்கினார்கள். நவகாளியின் பயங்கரங்களை நினைவூட்டி அவரைத் தடுத்துப் பார்த்தார்கள். மகாத்மாஜி இதற்கெல்லாம் இணங்கவில்லை.

இந்தச் சமயத்தில், புதுடெல்லியில் பண்டித ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் கடினமான அரசாங்கப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மகாத்மாவின் ஆலோசனையின்றி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாத நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். எனவே,