பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

'நவீன தெனாலி ராமன்’ என்ற தலைப்பில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் நகைச் சுவை நிரம்பிய கதைகள் ஆகும். முதல்தலைப்பு வானத்து மீன்;அடுத்தது நவீன தெனாலிராமன்; அடுத்தது ராசியான பெயர்: ஈற்றில் இடம் பெறுவது நாரதரின் பூலோக யாத்திரை

இன்றைய சினிமாவில் கதைகளின் போக்குகளை முதல் கதை விமரிக்கிறது. நடிகை இறந்து விடுகிறாள். நாடே ஒப்பாரி வைக்கிறது. காரணம் அவளை ரசித்தவர்கள் கலா ரசிகர்கள்; கலை உலக இழப்பு என்பதால் இந்த அளவிலா அங்கலாய்ப்பு; அழகி அவள் ஏன் செத்தாள்? யார் கொலை செய்தது? தற்கொலையா படு கொலையா அந்த வகையில் போலீசு நுழைகிறது. எனவே மர்ம நாவலின் சாயல் இதில் இடம் பெறுகிறது.

அடுத்தது நவீன தெனாலிராமன். உதிரியாக எழும் துணுக்குகளுக்குப் பாத்திரங்கள் இடம் சூழ்நிலை அமைத்துத் தொடர்ச் சித்திரமாக ஆக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்; அதற்கு அவன் கதை ஒர் எடுத்துக்காட்டு ஆகிறது.

சந்தர்ப்பங்கள்தான் மனிதனை உயர்த்துகிறது. லைட் பாயாக நுழைந்தவன் லைப் பாய் சோப்பில் விளம்பரம் ஆகிப் பின் நடிகனாகி விட்டான் என்பது இன்றைய பேச்சு வழக்கு. இந்தக் கதாநாயகன் சந்தர்ப்பவாதிதான் ஏன் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிதான். அது இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை அவன் எதையும் நகைச் சுவையோடு காண்கிறான்; எடுத்துக்கொள்கிறான். சிரிப்பும் சிந்தனையும் கூடிய கதை இது.