பக்கம்:நாகப்பட்டினம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாகபட்டினம்

(நாகர்பட்டின வரலாறு)

1. வரலாற்று நாகை

அ. வளையல் துண்டு

நீல நிற அலைகளுக்குப் பொன்னிற முலாம் பூசுவதற்கு மாலை நேரக் கதிரவன் முயன்று கொண்டிருந்தான். அதில் உள்ளத்தில் ஊன்றியவாறு நாகர்பட்டினக் கடற்கரையில் நடை விரித்தேன்.

ஏதோ ஒன்று 'சுறுக்' கென்று காலில் தைத்தது. அலைமேல் அடகு போயிருந்த உள்ளம் 'நறுக்' கென்று மீண்டது. தானே கால் மேலே எழுந்தது. பெருவிரல் நகத்தில் பாய்ந்திருந்த ஒன்றை 'வெடுக்' கென்று பறிந்தேன். அஃது ஒரு வளையல் துண்டு.

என்னையும் அறியாமல் 'சீ! பாழும் வளையல் துண்டே காட்சி இன்பத்தில் மூழ்கியிருந்த உள்ளத்தை இப்படி இழுத்து விட்டாயே' - என்றேன்.

'நான் வெற்று வளையல் துண்டென்று நினைத்தாயா? சங்கு வளையல் துண்டு - வளையல் துண்டு பேசிப் பார்த்தது.

வியந்த நான், 'சங்கு என்றால் மேம்பட்டதோ' - என்று வம்புக் கிழுத்தேன்.

'இல்லையோ மேன்மக்களுக்கு என்னைத்தானே உவமை சொன்னார். "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" 1 என்ற மூதுரை உனக்குத் தெரியாதா அஃது இருக்கட்டும். எமது நாடு நாகநாடு. நாகரிகம் என்னும் சொல்லே எம் நாட்டு மக்களின் அடிப்படையில் அமைந்தது என்பரே! புகழ் நிறைந்ததன்றோ எம் நாகநாடு புகார் நகரின் பெருமையைப் பாடிய இளங்கோவடிகளார் எம் நாட்டைச் சுட்டி, "நாகநாடதனொடு... நீள் புகழ்" (2) என்றதை நினைவு படுத்திக்கொள். மேலும் கேள்: எம் நாட்டு மன்னர்பெருமான் பெயர் வளைவணன் என்பது. எம் மன்னர்பெருமான் பெயரின் முற்பகுதியில் எம் பெயராம் வளை அமைந்திருப்பதைப் பார். மன்னர் பெருமானது பட்டத்தரசி வாசமயிலைப் பெற்றெடுத்த மகள் - எம் அரசிளங்குமரியின் பெயர் 'பீலிவளை’. இப்பெயரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/19&oldid=518304" இலிருந்து மீள்விக்கப்பட்டது