பக்கம்:நாகப்பட்டினம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாகபட்டினம்

நோட்டமிட்டுவந்தது. ஓர் உப்பளப் பகுதியில் வந்தோம். அதனை அடுத்து ஒரு பெரும் மணல்மேடு. அங்கு இளவரசி இறங்கிக் கரையோரமாகவே நடந்து வந்தாள். ஒர் அழகான பசுஞ்சோலை எம்மை அழைப்பதுபோலத் தென்றலால் தாலாட்டப்பெற்று அசைந்து கொண்டிருந்தது. அங்கு புன்னை மரங்கள் தம் பசுமை அலையால் கடல் அலையைப் பழித்தன. அங்குப் பூத்துக் குலுங்கிய மலர்க்காடு இளவரசி உள்ளத்தில் ஒரு கிளர் உணர்வைத் தூண்டி இழுத்தது. அந்த இடத்தைத்தான் அவள் தேடிவந்ததுபோல் தோன்றியது. கரைப்பக்கம் திரும்பிக் கலத்தை நிறுத்திவைக்குமாறு கைக்குறிகாட்டிக் கரைக்குள் சென்றாள். சோலையை நெருங்க நெருங்க அவள் துள்ளும் உணர்வில் கொப்பளித்துச் செல்வது போல் இருந்தது. தோழியும் பின் தொடர்ந்தாள். சோலைக்குள் புகுந்தாள். அழைப்பாரின்றியே சென்றாள். சோலை நடுவே ஒரு பூப்பந்தலில் அழகிய மேடை மேடையில்... மேடையில் பூமான் சோழப்பெருமன்னன் நெடுமுடிக்கிள்ளி அமர்ந்திருந்தான். எம் பீலிவளைதான் முதலில் நோக்கினாள், பூரிப்பின் பிறையானாள். திரும்பிவிடுவோம் என்றழைத்த தோழியைக் கையமர்த்தியதுமட்டு மன்றித் தன்னைத் தொடராமல் செல்லுமாறு கைகாட்டி உணர்வின் பிழம்பாக நடந்தாள். ஒரு புன்னைமர மறைவில் தோழி நின்றாள்.

இடம் சோலை; நேரம் மாலை, வீசுவது தென்றல்; பேசுவது குயில்; உலவுவது மணம், குலவுவன புறவினம். இவற்றிடையே எழில் கொஞ்சும் அரசிளங்குமரி, இளமை குலுங்கும் அவள் பார்வை; ஆண்மை கொழிக்கும் சோழப் பேரரசன். என்ன கதை துவங்கும் அக்கதை அரும்பியது. குமரியைக் கண்ட மன்னன் வியப்பைவிட உணர்ச்சியின் விறுவிறுப்பில் ஏறி நின்றான். "யாரிவள் எனும் எண்ணத்தை மீறிக் காதல் மயக்கம் தலைதுாக்கியது.

அதற்குமேல் தோழி நின்று பார்க்கும் நிலை இல்லை. அவள் திரும்பிவிட்டாள். -

1. "உம்பலம் தழிஇய உயர்மணல் நெடுங்கோட்டுப்

பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல்"

மணிமேகலை: 24:27,28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/24&oldid=584906" இலிருந்து மீள்விக்கப்பட்டது