பக்கம்:நாகப்பட்டினம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 3.31

கவித்திருமதி காளிமுத்து (கி.பி. 18 நூற்.) அடுத்து நமக்குக் கிடைப்பவர் ஒரு பெண்பாற் புலவர். இடையில் எவரையும் அறிய வகை இல்லை. புலவர்கள் தம் வரலாற்றைக் குறிப்பது தற்புகழ்ச்சியாகக் கருதியதால் வரலாறுகள் பதியப்பட வில்லை. ஆற்றில் போன சுவடிகள், கரையான் தின்றவை, வெளிநாடு போனவை, முடங்கிக் கிடப்பவை என்னும் பகுதிகளே ஒலைச் சுவடி வரலாற்றில் மிகுதி. இவற்றில் இருப்பவை - தூங்குபவை. எழுப்பப்படும்போது நாகையில் புலவர் பெயர் வரலாம்.

கிடைத்துள்ள பெண்பால்புலவர் காளிமுத்துப் புலவர் இவர் நாகையில் குறுநில மன்னர் போன்று வாழ்ந்த வருணகுலாதித்தன் மேல் ஓர் உலாமடல்நூல் பாடியுள்ளார். நாகைக் காளிமுத்து -

இவர் நாகைப் புலவர் என்பதை அறிஞர் திரு. கா.சு, பிள்ளை யவர்கள் தம் இலக்கிய வரலாற்றில் குறித்துள்ளார் (7). தமிழறிஞர் திரு. மு.சி. பூர்ணலிங்கம்பிள்ளையும் "வருணகுலாதித்தன் மடலைத் தாசி காளிமுத்து பாடி"யதாக எழுதியுள்ளார் (8). தமிழறிஞர் திரு மு. அருணாசலம் அவர்களும் காளிமுத்தம்மை நாகைப் புலவர் என்றே காட்டியுள்ளார்.

இக்கவித்திருமதி காளிமுத்து பற்றி வேறுபட்ட செய்திகள் அறிஞர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள கொழும்பு தமிழ்ச்சங்கம் பாவலர் சரித்திர தீபம் என்றொரு நூலை வெளியிட்டுள்ளது. இதில் -

"காளிமுத்துப் புலவர் வரலாறு தெரியவில்லை. ஏழு தனிப்பாடல்கள் உள. ஒவ்வொரு பாடலும் வேலப்பன் மைந்தன் குருநாதன் என்று முடிகிறது. கேலிப் புலவனோ இலக்கண இலக்கியங்கள் நன்கு கற்றுச் சாலப் புகழப் பெற்று விளங்கிய புலவனோ அறியோம் (9) என்றுள்ளது.

அறிஞர் திரு ந.சி. கந்தையா அவர்கள் ஒரு பாடலைக் காட்டி தாசி காளிமுத்து பாடல் என்றெழுதியுள்ளார். (10)

அபிதான சிந்தாமணியில் "காளிமுத்து தாசி" என்றும் அவள் மயிலைக் குழந்தை முதலியாரையும் பள்ளிக்கொண்டான் எனும் பரதவனையும் பாடிப் பரிசு பெற்றார் என்றும் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/349&oldid=585230" இலிருந்து மீள்விக்கப்பட்டது