பக்கம்:நாகப்பட்டினம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நாகபட்டினம்

இருவர் முனைந்தனர். ஒருவர் தேவாரத் திருக்கூட்டத் தலைவராக இருந்த தவத்திரு வீரப்ப செட்டியார். மற்றவர் நாகையில் அரசுப் பணிகளின் மேற்பார்வையாளராக (Overseas) அலுவல் புரிந்த திரு அப்பாத்துரை முதலியார். இருவர் வேண்டுகோளையும் ஏற்றுப் பிள்ளையவர்கள் நாகை வந்து சட்டையப்பர் கோயில் தெருவிலமைந்த திருவாவடுதுறை மடத்தில் உறைந்து 1869 ஏப்ரலில் திருநாகைக் காரோனப் புராணத்தை எழுதத் துவங்கினார்கள். ஓராண்டுக் காலம் இப்படைப்பைச் செய்தார்கள்.

குருதி கசிந்த விரல்

இப்பணியின் போது நேர்ந்த சுவையான நிகழ்ச்சிகள் பல. ஒன்றையேனும் குறிக்கவேண்டும் அது பிள்ளையவர்களின் செய்யுள் இயற்றும் விரைவையும் மணிக்கணக்கில் தொடர்ந்து செய்யுளைச் சொல்லிக் கொண்டே போகும் ஆற்றலையும் பதிவதாகும்.

அக்காலக் கட்டத்தில் பனையோலையில் எழுதும் பழக்கும் இருந்தது. செய்யுளியற்றுவோர் தாமும் எழுதுவர்; அவர் சொல்லக் கேட்டு எழுதும் ஏடெழுதுவோரும் இருந்தனர். இதன் குறிப்பில் தான் "எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்" என்னும் பழமொழி எழுந்தது.

பிள்ளையவர்களது மாணவர் உரத்தநாடு கோபால் பிள்ளை என்பார் பிள்ளையவர்கள் சொல்ல, பனை ஏட்டில் எழுத அமைந் தார். ஒலையில் விரைந்து எழுதும் திறனாளர். இவர். இத்திறத் தைப்பற்றிய தன்முனைப்பான பெருமையும் கொள்பவர். ஒருநாள்,

"ஐயா அவர்கள் என்னுடைய கை வலிக்கும்படி பாடல் சொல்லுகிறார்களில்லையே" என்று நண்பரிடம் சொல் லியதை உள்ளிருந்து கேட்ட பிள்ளையவர்கள் அன்று பாடல்களைச் சொல்லத் துவங்கினார்கள். காலை ஏழுமணிக்குத் தொடங்கியது. அன்று மிகத் தொடர்ச்சியாக விரைந்தன செய்யுள்கள். 10மணிக்கு நிறுத்தும் நேரம் போய் 12மணி வரை நீடித்தது. 11 மணி அளவிலேயே ஏடு எழுதிய திரு கோபாலர் விரல்களில் குருதி கட்டிச் சிவந்து 12 மணியில் குருதி கசியும் நிலைவந்து வலி துடிக்க வைத்தது. விரலை அசைக்க முடியாத நிலையில் சுவடிகளையும் எழுத்தாணியையும் பிள்ளையவர்கள் திருவடியில் வைத்து வீழ்ந்து வணங்கிக் கசிந்து பொறுத்தாற்ற வேண்டினார். (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/362&oldid=585243" இலிருந்து மீள்விக்கப்பட்டது