பக்கம்:நாகப்பட்டினம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ. இந்தியாவில் நாகர்

நாகநாட்டவர் அங்கிருந்து தமிழ்நாட்டுக் கடற்கரையூருக்கு வந்து குடியமர்ந்தனர் என்பது ஒன்றுமட்டுமல்லாது, இந்தியாவில் பல பகுதிகளிலும் குடியேறி வாழ்ந்தனர் - வாழ்ந்து வருகின்றனர் - நிலைத்துள்ளனர் என்பதையும் காணலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் நாகநாட்டு நாகர் குடியேறினர். அங்குள்ள ஆதிக்கக் குடியினர் பட்டியலில் நாகர்களே மிகுதியானவர். அன்னார் அங்கு வாழ்ந்த பகுதி மலைப்பகுதி. அப்பகுதி அன்னார் தொடர்பால் நாகதிரி - நாகமலை என்று பெயர் பெற்றது. அன்னார் தம் கொத்தடிமையை உணர்ந்து, துடித்தெழுந்து புரட்சி செய்து தம் பெயரால் "நாகாலாந்து' என்னும் தனி மாநிலம் அமையப்பெற்றுள்ளனர்.

1951 ஆம் ஆண்டுக் கணக்கின்படி அசாமில் மக்கள் தொகை 90 நூறாயிரம். அவருள் ஆதிக்குடிகளாகிய நாகர் 5 நூறாயிரம், இந்நாகருள் பல பிரிவினர் உளர். அங்கமி, அரங்கமர் சேமர் லோக்தர், ஆவோ, சோன்யகர், சங்கு, துக்கோயி என்னும் குடிப்பெயர் கொண்டுள்ளனர்.

இப்பெயர்ச் சொற்களுள் பல தமிழ் அடிநிலை கொண்டவை. அவற்றிலும் சங்கு (வளை) என்னும் பெயர் தமிழ்ச்சொல் அறிமுகத்துடன் மணிமேகலையில் காணப்பெறும். வளைவனன், பீலிவளை என்னும் தமிழ்ச் சொல்லுருவங் கொண்டுள்ளமை கருதத்தக்கது. இந்நாகர் பற்றி ஆய்ந்தெழுதிய மாந்தரியல் பேராசிரியராகிய கே. பக்ராசி என்பார் இவ்வினத்தவர் வாழ்வியல், ஆட்சியியல் முறைகளையும் அறிவித்துள்ளார்.

ஒரே தெய்வ வணக்கமுள்ளவர். ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் வாழ்வினரும் உளர். பலமனைவி வாழ்வினரும் உளர். சமுதாய ஒற்றுமை உடையவர்: கலை வல்லுநர், உழைப்பாளர் என்பவற்றை யும் கண்டறிந்துள்ளார். மற்றொரு மாந்தரியல் பேராசிரியராகிய தி.என். மசும்தார் என்பார் நாகர்தம் ஆட்சி முறையை,

"நாகர் போன்ற அசாம் ஆதிக்குடிக ளிடையே தலைவர் ஆட்சியும், மற்றைக் குடிகளிடையே மக்களாட்சியும் காணப்படுகின்றன" என்று குறித்துள்ளார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/70&oldid=584952" இலிருந்து மீள்விக்கப்பட்டது