பக்கம்:நாடகக் கலை 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

என்று பாட்டாகப் பாடினால் அது இசை; இதையே முக பாவங்களைக் காட்டிக் கை முத்திரைகளோடு விளக்குவது நாடகம். இயல், இசை, நாடகம் என வரிசைப்படுத்திப் பார்க்கும்போது நாடகம் மூன்றாவதாக இருந்தாலும் இயலும், இசையும், அதாவது பாட்டும், பேச்சும் இன்று நாடகத்திற்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால் நாம் நாடகத்தை முதன்மையாகக் கொள்வதில் தவறில்லை.

இந்த முதன்மையை எண்ணித்தான் நமது முன்னோர்கள் தமிழுக்கு இலக்கணம் கண்டபோதே நாடகத்தைத் தமிழிலிருந்து வேறுபடுத்த முடியாதபடி ‘இயலிசை நாடக மெனுந் தமிழ்’ என மொழியோடு நாடகத்தையும் இணைத்திருக்கிறார்கள். ஒளவைப் பிராட்டியார் பாடுகிறார்; பால், தேன், பாகு, பருப்பு இவை நான்கையும் நான் உனக்குத் தருகிறேன்; இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழையும் நீ எனக்குக் கொடு' என்று இறைவனை வேண்டுகிறார்.

"பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா?”

இவ்வாறு பாடுகிறார் ஒளவையார். எனவே, நாடகம் தமிழ் மொழியோடு இணைந்துவிட்ட ஒரு நற்கலை. தமிழ் என்று சொல்லும்போதே அது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைப் பகுதிகளையும் உள்ளடக்கி நிற்கின்றது. இப்படிப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளாக மொழியை வேறு யாரும் வகுத்ததில்லை. இது நமது தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/26&oldid=1540110" இலிருந்து மீள்விக்கப்பட்டது