பக்கம்:நாடகத் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உண்டென அறிகிறோம். இங்ஙனமே, குடத்துப்பால் உறையாமை முதலிய துர்ச்சகுனங்களைக் கண்டு, ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடினதாகக் கூறப்பட்டிருப்பதால், ஆய்ச்சியரும் இக்குரவைக் கூத்தாடும் வழக்கம் உண்டென்றறிகிறோம். இஃதன்றியும் இந்திரவிழ வூரெடுத்த காதையில், மறக்குலப் பெண்டிர் குரவைக் கூத்தாடியதாக அறிகிறோம். குரவைக்கூத்தில் தலைவனது வரவை வேண்டிப்பாடும் பாட்டிற்கு கொண்டுநிலை என்று பெயராம். முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை’யென இரண்டு வகை கூறப்பட்டிருக்கின்றன. குரவைக் கூத்தின் இடையே பாடும் பாட்டிற்கு பாட்டுமடை என்று பெயராம்,

கலிநடம் என்பது கழாய்க் கூத்தாம். இது மூங்கிற் கம்பத்தை பூமியில் நிறுத்தி அதன்மீது நின்றாடும் கூத்தாகும். தற்காலத்தும் தொம்பரவர் எனும் ஜாதியார் இவ்வாறு ஆடுதல் கவனிக்கற்பாலது. கழை-மூங்கில், கழைக் கூத்தாடுவோர்க்கு வேழம்பர் என்கிற ஒரு பெயர் உண்டென அறிகிறோம். இதற்கு கம்பக்கூத்து என்றும் மற்றொரு பெயர் உண்டு. இதை ஆரியக்கூத்து என்பாருமுளர்.

குடக்கூத்து என்பது குடத்தை தலைமீது சுமந்து ஆடுங்கூத்தாகும். இது சிலப்பதிகாரத்துள், ஆடல் பதினென்று என்று வகுத்தவகையில், அப்பதினென்றில் ஒன்றாம். கடலாடு காதையில் வாணன் பேரூர், மறுகிடை நடைத்து, நீணிலமளந் தோன் ஆடிய குடமும் ’’ என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்; இதற்கு அடியார்க்கு நல்லார் 'காமன்மகன் அதிருத்தனத், தன்மகள் உழைகாரணமாக, வாணன் சிறைவைத்தலின், அவனுடைய சோவென்னும் நகரவீதியிற் சென்று, நிலங்கடந்த நீணிற வண்ணன் குடம் கொண்டாடிய குடக் கூத்தும் என்று உரை எழுதியுள்ளார். இவ்வாடலில் மண்ணாலும் பஞ்ச லோகங்களிலும் ஆக்கப்பட்ட குடங்களை உபயோகித்தனர் என்பதையும் அறிகிகிறோம், தற்காலத்தும் இவ்விதமான ஆடல், ஆடி மாதத்தில் கிராம தேவதைகளின் உற்சவகாலத்தில், பூசாரிகள் தங்கள் தலைமீது குடம் (கரகம்) வைத்து ஆடுகிற வழக்கம் இருப்பதைக் காண்க.

கரணக் கூத்து என்பதற்கு அடியார்க்கு நல்லார் படிந்த வாடல் என்று வியாக்கியானம் செய்திருக்கிறார். இது ஒரு வகையான கூத்து விகற்பம் என்பது தவிர, இதற்குமேல் ஒன்றும் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/10&oldid=1285055" இலிருந்து மீள்விக்கப்பட்டது