பக்கம்:நாடகத் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

பதத்தைப்பற்றி, தமிழ் வித்வானும் நூலாசிரியருமான எனது நண்பர் கா. நமசிவாய முதலியார் இது வாசகப்பா என்னும் பதத்தின் மருவாகும் என எண்ணுகிறார், சாரங்கதர வாசகப்பா' என்னும் ஒரு நாடகத்தைப் பற்றித் தான் கேள்விப்பட்டதாக எனக்குத் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை. மேற்சொன்னவைகளன்றி, பழைய நூல்களில் கொலச்சாரி, சந்திக் கூத்து, சீழ்க்கைக் கூத்து, துடிக் கூத்து, குணலை, குணாலயம், குழமணிதுரம், கூட்டை, குனிப்பு என்பவைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் : கொலச்சாரி வேட்டுவமகள் கொற்றவை யுருவைக்கொண்டு ஆடும் கூத்தாம் ; சந்திக் கூத்தென்பது திரு விழாவில் கோயிலின் முன் பெண்பாலர் ஆடுங்கூத்தாம் ; சீழ்க்கைக் கூத்தென்பது சீழ்க்கை எழுப்பி ஆடுங் கூத்தாம் ; (தற்காலமும் ஆதிதிராவிடர்கள் சவங்களைக் கொண்டு போகும் போது சீழ்க்கை அடித்துக் கொண்டும் கூத்தாடிக் கொண்டும் போகிற வழக்கம் உண்டு.) துடிக்கூத்து என்பது, முருகக் கடவுள் சப்த மாதருடன் துடிகொட்டியாடிய கூத்தாம் : குணலை என்பது ஆரவாரத்துடன் நடிக்கும் கூத்தாம் ; குணாலயம் என்பது ஒருவகை மகிழ்ச்சிக் கூத்தாம் ; குழமணி தூரம் என்பது வென்றவர் தம்மீது இரங்குமாறு தோற்றவர் பாடிக் கொண்டு ஆடும் ஓர்வகைக் கூத்தசம் : கூட்டை என்பது ஓர் வகைக் கூத்து என்பது தவிர வேறொன்றும் தெரியவில்லை. குனிப்பு என்பது ஒர்வகைக் கூத்து என்று பிங்கள நிகண்டில்கூறப்பட்டிருக்கிறது; இதைப்பற்றியும் வேறொன்றும் தெரியவில்லை.

இனி, மேற்கூறிய கூத்துகளின் இலக்கணங்களைப் பற்றி பூர்வ ஆசிரியர்கள் கூறியதைக் கருதுவோம். கூற்றின் இலக்கணங்கள் அறுவகை நிலையும், ஐவகைப்பாதமும், ஈரெண்வகைய அங்கக் கிரியையும் வருத்தனே நான்கும் நிருத்தக்கை முப்பதும்'’ எனக் கூறி, இவை விரிப்பிற் பெருகும் என முடித்துளார் அடியார்க்கு நல்லார். மேற்கண்டவை இன்ன இன்ன என்று சுத்தாந்தப் பிரகாச மென்னும் பழய தமிழ் பரத நூலில் விரித்துக் கூறியுளது, அடியிற் கண்டவாறு.

அறுவகை நிலை-வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம்.

ஐவகைப் பாதம்-சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/15&oldid=1285071" இலிருந்து மீள்விக்கப்பட்டது