பக்கம்:நாடகத் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

வருங்கால். நாடகம், பிரகரணப் பிரகரணம், அங்கம் எனப் பெயர் பெறும் என்று மதிவாணனார் நூலினின்றும் அறிகிறோம். இந்நான்கு வகைப்பட்ட பொருள்களைப்பற்றிக் கூறும்பொழுது, செயிற்றியனார், 'அறம் பொருள் இன்பம்' அரசர் ஜாதியெனவும், 'அறம் பொருள்' வணிகர் ஜாதியெனவும்,'அறம்' சூத்திர ஜாதியெனவும் வகுத்துள்ளார். அதனின்றும் 'அறம் பொருள் இன்பம் வீடு நான்கும் சேர்த்து வரும் பொழுது பிராம்மண ஜாதியென்பது அவர் கருத்தென்று ஊகிப்பதற்கு இடங்கொடுக்கிறது.

யோனி:-என்பது நான்கு வகைத்தாகும். அவை-உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண் மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற்செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லாதோர் பொருண்மேற்செய்தலும்' என்று அடியார்க்கு நல்லார் வரைந்துள்ளார்.

விருத்தி: நான்கு வகைத்து அவை (1) சாத்துவதி-அறம் பொருளாகவும், தெய்வ மானிடர் தலைவராகவும் வருகிறது. (2) ஆரபடி- பொருள் பொருளாகவும், வீரராகிய மானிடர் தலைவராகவும் வருவது. (3) கைசிகி :-காமம் பொருளாகவும். காமுகராகிய மக்கள் தலைவராகவும் வருவது. (4) பாரதி-கூத்தன் தலைவனாக, நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது.

சக்தி ஐந்து வகைத்தாம் :-முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு துய்த்தல் என இந்த ஐந்து சந்தியும் நாட்டியக்கட்டுரை எனக் கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார்.

சுவை ஒன்பதாம் :-வீரச்சுவை, பயச்சுவை, இழிப்புச்சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை, நடுவு நிலைச்சுவை, உருத்திரச்சுவை. இது சம்ஸ்கிருதத்தில் ரசம் என்பதற்கொப்பாகும். நவரசங்களென சம்ஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வொவ்வொரு சுவைக்கும் (உருத்திரச் சுவைக்குத் தவிர) தக்க அவிநயம் இன்னதெனக் கூறியிருப்பதை அடியார்க்கு நல்லார் உரையில் கண்டு கொள்க. சுவைகளைப்பற்றிக் கூறுங்காலை அடியார்க்கு நல்லார் அச்சுவைகளில் எண்ணம் வந்தால் தோற்றுமுடம்பில், உடம்பின் மிகத் தோற்றும் முகத்து, முகத்தின் மிகத் தோற்றும் கண்ணில், கண்ணின் மிகத் தோற்றும் கண்ணிற் கடையகத்து' என்று மிகவும் பொருள்பட அழகாய்க் கூறியது கவனிக்கற்பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/17&oldid=1285532" இலிருந்து மீள்விக்கப்பட்டது