பக்கம்:நாடகத் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பேடு -காமன் (மன்மதன்) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது. மரக்கால் -மாயவள் (இலச்சுமி) ஆடியது- நான்கு உறுப்பு கொண்டது. பாவை-திருமகள் (இலட்சுமி) ஆடியது- இரண்டு உறுப்புடைத்து.

கடையம்-புற நாடகங்கள் பதினொன்றில் இஃது இறுதிக் கூத்தானமையின் இப்பெயர் பெற்றதென்பர், (உ. வே. சாமிநாதையர்).

மணிமேகலை.

மேற்கூறிய ஆடல்களைப் பற்றி நாம் அறிந்ததை இனி கருதுவோம்.அல்லியம் முதல், மல்வரையுள்ள ஆறு கூத்துகளும்,நின்றாடும் தெய்வக் கூத்து எனக் கூறப்பட்டிருக்கிறது,

அல்லியம் :- இது 'அஞ்சனவண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய’’ ஆடலாம். அல்லியம் என்பதன அலிப்பேடென்பாருமுளர் என்று அடியார்க்கு நல்லார் கூறியிருக்கின்றார்.

புறநானூற்றில் அல்லிப்பாவை'’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு “அல்லியக் கூத்தில் ஆட்டும் பிரதிமை” என்று பொருள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இக்கூத்து பாவைகளைக் கொண்டும் ஆடப்பட்டது போலும்.

கொட்டி. இதற்குக் கொடுகொட்டி யென்றும் பெயர். கொடுங்கொட்டி, கொடுகொட்டியென விகாரமாயிற்றென்பர் நச்சினார்க்கினியர். அடியார்க்கு நல்லார் இதைப்பற்றி உரை எழுதுங்கால், தேவர் புரமெரிய வேண்டுதலால், வடவையெரியைத் தலையிலே யுடைய பெரிய வம்பு ஏவல் கேட்டவளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்குவையாகிய பாரதி அரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்குச்சீரெனும் தாளங்களைச் செலுத்த, தேவர் யாவரினு முயர்ந்த இறைவன், சயானந்தத்தாற் கை கொட்டி நின்று ஆடிய கொடு கெட்டி யென்னு மாடல்' என்று வரைந்துள்ளார். திரிபுரம் தீமடுத் தெரியக்கண்டு இரங்காது கை கொட்டி நின்று ஆடுதலில் கொடுமையுடைத்ததால் நோக்கி கொடுகெட்டி யெனும் பெயர் வந்ததெனக் கூறியுள்ளார். இக் கொடுகெட்டி என்பது தற்காலத்தில் வழக்கில் இல்லாது பொன்றிய போதிலும் ஏழாம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்ததென திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தினால் அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/20&oldid=1286377" இலிருந்து மீள்விக்கப்பட்டது