பக்கம்:நாடகத் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

மரக்கால் :- காலிலே மரத்தைக் கட்டி வாளை யெடுத்து நின்றாடுங் கூத்தென உரையாசிரியர் இதற்கு அர்த்தம் செய்துள்ளார். அடியார்க்கு நல்லார் மரக்கான் மேனின்று வாட்கூத்தை யாடுவதாம் என உரை எழுதியுள்ளார்.

'காயும் சினத்தையுடைய அவுனர் வஞ்சத்தாற் செய்யும் கொடுந் தொழிலைப் பொருளாய் மாயோள (துர்க்கை)ல் ஆடப்பட்டது' என்றும் அவுனர் உண்மைப் போரான் வேறலாற்றாது வஞ்சத்தான் வேறல் கருதிப் பாம்பு தேள் முதலிய வாய்ப் புகுதலே யுணர்ந்து அவள் (மாயவள்) அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடுதலின் மரக்காலாட'லாயிற்று எனவும் கூறப்பட்டிருக்கிறது. மரக்காலைக் கவிழ்த்து அதன்மீது நின்று ஆடும் ஆடல் போலும், மரக்காலுடன் ஆடிய துர்க்கைக்கு அம்பணத்தி என்ற பெயருண்டென அறிகிறோம். தற்காலத்தில் ஆடல் புரியும் மாதர் தட்டின் மீது நின்று ஆடும் ஆட்டம் இங்கு கவனிக்கத்தக்கது.

பாவை :- "அவுனர் வெவ்வியபோர் செய்தற்குச் சமைந்த போர்க் கோலத்தோடு மோகித்து விழும்படி, கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட ஆடல்' எனக் கூறப்பட்டிருக்கிறது. மேற்கூறிய ஆடல்களுள், பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம், மூன்றும் சிவனாடல் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இப்பதினேராடல்களுள் ஒன்றாவது தற்கால வழக்கில் இருப்பதாகக் காணவில்லை.

கூத்துகளை அகக்கூத்து, புறக்கூத்து என்று பிரிக்குமிடத்து அகக்கூத்திற்கு கந்தமுதலாகப் பிரபந்த மீறாக இருபத்தெட்டு உருக்களும், புறக்கூத்திற்கு தேவபாணி முதல் அரங்கொழிச் செய்யுள் ஈறாக உள்ள செந்துறை விகற்பங்களும் உண்டென அறிகிறோம். இவைகள் இன்னின்னவென இதர நூல்களிற் கண்டு கொள்க.

அகக் கூத்தாடுங்கால் தேசிக்குரிய கால்கள் 24 வகையென்றும், வடுகிற்குரிய கால்கள் 14 என்றும் கூறப்பட்டிருக்கிறது.

புறக் கூத்திற்குரிய ஆடல்கள் பெருநடை, சாரியை, பிரமரி முதலாயினவென்றும் கூறப்பட்டிருக்கிறது.

பிண்டியும் பிணையலும் அகக்கூத்திற் குரியவையென்றும், எழிற்கையும் தொழிற்கையும் புறக்கூத்திற்குரிய கையென்றும் சொல்லப்பட்டிருக்கிறது,

பிண்டி என்பது ஒற்றைக் கை-இது முப்பத்துமூன்று வகைத் தாம் என்று அடியார்க்கு நல்லாரும், இருப்பது நான்கு வகையென உரையாசிரியரும் கூறியுள்ளார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/23&oldid=1287611" இலிருந்து மீள்விக்கப்பட்டது