பக்கம்:நாடகத் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29



இரண்டாவது அத்தியாயம்


சற்றேறக்குறைய 1500 வருடங்களுக்குமுன் தமிழ் நாடகங்களைப்பற்றி நாம் அறிந்ததை இதுவரையில் ஒருவாறு ஆராய்ந்தோம். இங்கு நாம் முக்கியமாய்க் கவனிக்கற்பாலது என்னை யெனின், நாம் அறிந்ததெல்லாம் நாடக இலட்சணத்தைப் பற்றியதாயிருக்கிறதே யொழிய, நாடக இலக்கியத்தைப்பற்றி ஒன்றும் தெரிந்திலம். இதை இன்னொரு வழியாகக் கூறுமிடத்து, அக்காலத்தில் தமிழ் நாடகங்கள் நடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அறிந்தபோதிலும், அப்படி நடிக்கப்பட்ட ஒரு நாடகத்தின் இலக்கியமாவது நமக்கு வந்திலது. அன்றியும் முற்கூறிய சங்க காலத்திற்குப் பிறகு நாயன்மார்கள் ஆழ்வாராதிகள் காலத்திலும் தமிழில் நாடகங்கள் நடிக்கப்பட்டனவென்பதற்குச் சந்தேகமில்லை. தேவாரத் திருவாசகங்களில் நாடகத்தைப் பற்றியும் கூத்தரைப்பற்றியும் அநேக இடங்களிற் கூறப்பட்டிருக்கின்றன. சுழுதொடுகாட்டிடை நாடகமாடி நகவேதகும் எம்பிரான் என்னே நீ செய்த நாடகமே? நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து'’ கோனாகி, யானெனதென்ற வரவரைக் கூத்தாட்டுவானாகி ஊனை நாடகமாடுவித்தவா?? "ஞானநாடகமாடுவித்தவா" "நானாவிதத்தான் கூத்து கவிற்றி" என்று தேவார திருவாசங்களில் கூறியிருப்பதைக் காண்க. இதற்குப் பிற்காலமாகிய கம்ப நாடர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி முதலியோர் காலத்தும் தமிழ் நாடகங்கள் நடத்தப்பட்டன வென்பதற்கு அவர்களுடைய நூல்களில் நாடகத்தைப்பற்றியும் கூத்தைப்பற்றியும் கூறியிருப்பதே தகுந்த அத்தாட்சியாகும். அதிகமாய்க் கூறுவதென்? திருவள்ளுவர் காலமுதல் இற்றைவரைக்கும் இருந்த பிரபலமான தமிழ் கவிஞர்கள் ஒவ்வொருவரும் "நாடகம்" "கூத்து" என்னும் பதங்களை தங்கள் பாக்களில் உபயோகிக்காதார் ஒருவருமில்லை யென்றே உறுதியாய்க் கூறலாம். இங்ஙனமிருக்க, சற்றேறக்குறைய 300 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ்நாடகக் கிரந்தம்கூட இப்பொழுது ஒன்றும் நமக்குக் கிடைக்காததற்குக் காரணம் என்ன? அன்றியும், அந்நாள்வரைக்கும் தமிழ்ப் புலவர் என்று பெயர் பெற்ற ஒருவராவது தமிழ் நாடகம் இயற்றியதாக நாம் கேட்டறிந்தோமில்லை; இதற்குக் காரணம் என்ன? என்கிற இவ்விரண்டு கேள்விகளும் இங்கு ஆராயத்தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/31&oldid=1287672" இலிருந்து மீள்விக்கப்பட்டது