பக்கம்:நாடகத் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சங்க காலத்திலேயே நாடக இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு ஐயம் இன்று. இதற்கு முக்கியமான அத்தாட்சி அக்காலத்தில் அநேக நாடக இலக்கணங்கள் இருந்ததே போதுமானது. இலக்கியங் கண்டதற்கே இலக்கணம் கூறுதல் முறமையானபடியாலும், இலக்கியங்களின்றி இலக்கணம் பிறவாது எனும் உண்மை அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறபடியாலும், சங்க காலத்தில் தமிழில் நாடகங்கள் இருந்தன என்பதற்குச் சந்தேகமில்லை. அப்படியிருக்க அக்காலத்திய நாடகங்கள் இறந்து பட்டதற்குக் காரணம் என்னவென்று நாம் ஆராயவேண்டியது அதி அவசியமாகின்றது.

இதற்கு முக்கிய காரணம் பூர்வீகத் தமிழ் நூல்களெல்லாம் ஓலைப் புஸ்தகங்களில் வரையப்பட்டிருத்ததேயாம் எனத் தோற்றுகிறது. இற்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் காகிதங்களில் தமிழ் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதற்குமுன் பூர்வகாலம் முதல் தமிழ் புத்தகங்கள் எல்லாம் ஓலைகளின்மீது எழுத்தாணிகளால் எழுதப்பட்டன. அப்படி எழுதப்பட்ட ஓலைகள் எத்தனை நாள் நிற்கும்? சில நூற்றாண்டுகள் கழிந்தால் அவைகளே தூள் தூளாக அழிந்துபோகும், அன்றியும் அவைகளை அதி ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வராவிட்டால், செல் முதலிய கிருமிகள் அவைகளை ஜீரணித்துவிடும். அடியார்க்கு நல்லார் தம் காலத்திற்கு முன்பே சில நாடக கிரந்தங்கள் இறந்துபட்டன என்று கூறியுள்ளதை முன்பே குறித்திருக்கிறோம். அவர் காலத்திலிருந்த, அவைகளிலிருந்து மேற்கோளாக சில சூத்திரங்கள் எடுத்துக் கூறியுள்ள சில நாடக இலக்கணங்கள், இப்பொழுது அநேகம் கிடைக்கவே கிடைக்கா. இதை விவரிப்பானேன்? நமது தேசத்தில் நமது பூர்வீகர்களுடைய நற்குணங்களில் அநேகம் கெட்டழிந்தபோதிலும், நமது மதாபிமானம் மாத்திரம் ஏறக்குறைய குன்றாதிருக்கிறதெனக் கூறலாம்; அப்படி அம்மதாபிமானம் இருந்தும் நமது மத சம்பந்தமான தேவாரப்பாக்களில் எத்தனை ஆயிரக்கணக்கானவை, பாதுகாப்பார் இன்றி இறந்துபட்டன என்பதைக் கவனிக்கும்பொழுது கண்ணிர் உகுக்காத தமிழ் பாஷாபிமானி எவராவது உளரோ? திருக்ஷேத்திரக் கோவைகளில் நமது சமய குரவர்களால் குறிக்கப்பட்டிருக்கும் அநேக க்ஷேத்திரங்களின் பாடல்கள் முற்றிலுமே இறந்து போயிருக்கின்றன. அன்றியும் சில பதிகங்களில் பத்துக்கு மூன்று நான்குதான் தேறியிருக்கின்றன. ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கெடுத்துக் கூறுகிறேன். திருவொற்றியூர் தேவாரத்தில் 'ஓம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/32&oldid=1287673" இலிருந்து மீள்விக்கப்பட்டது