பக்கம்:நாடகத் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

களிருந்திருந்திருந்தால், நமது பூர்வீக கவிகளில், ஒருவரும் ஏன் தமிழில் நாடகம் என்பதை இயற்றிலர் ? என்பதே அக்கேள்வியாகும். தொல்காப்பியர் காலமுதல் தமிழானது இயல், இசை, நாடகமென மூவகையாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும், சங்கப் புலவர்களாவது ஜீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களின் ஆசிரியர்களாவது, கம்பநாடார். ஒட்டக் கூத்தர், புகழேந்தி முதலிய கவிகளாவது, ஒருவரும் ஒரு நாடகமாவது தமிழில் எழுதியதாக நாம் கேள்வியும் பட்டோமில்லை. இது எக்காரணத்தினால் இருக்கக் கூடும் என நாம் ஆராய்வோம்.

வடநாட்டில் சமஸ்கிருதத்தில் அநேக அரிய பெரிய நாடகங்கள், காளிதாசர், பவபூதி முதலிய கவிசிரேஷ்டர்களால் எழுதப்பட்டபோதிலும், வர வர நாடகங்களுக்கு முன்னிருந்த மகிமை குறைந்து, க்ஷீணதிசையை யடைந்தது என்பது எல்லோர்க்கும் பிரசித்தமே, பூர்வீக காலத்தில் கற்றறிந்தோர், நாடக பாத்திரங்களாயிருந்து, நாடகங்களை நடித்தபோதிலும், வரவர நாடகங்கள் பாமரர்கள் கையிற்பட்டு நிந்தைக்குரியவை யாயின என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே. முகத்தை க்ஷவரம் செய்துகொண்டு நாடகமாடுமொருவனைப் பார்த்தால் அதற்குப் பிராய்ச்சித்தம் செய்யவேண்டுமென்று ஒரு ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது; இதைக் கொண்டு பிற்காலத்தில் நாடகங்களும் நாடகமாடுபவர்களும் என்ன ஈனஸ் திதிக்கு வந்துவிட்டன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இங்கிலாந்து தேசத்திலும் ஷேக்ஸ்பியர் மஹா கவியின் காலத்துக்குச் சிறிதுமுன், நாடகங்கள் கெளரவப்படுத்தப்படாமல், நாடகமாடுபவர்கள் நிந்தைக்குரியவரா யிருந்தனர் என்பது ஆங்கிலேயரே ஒப்புக்கொள்ளும் விஷயம். அக்காலத்தில் ஒரு நூலாசிரியர், கொலை செய்பவர்கள், வழிபறித்துண்பவர், நாடகமாடுபவர் இவர்களை யெல்லாம் சமப்படுத்தி ஒன்றாய்க் கூறியிருக்கின்றனர்! நமது தமிழ் நாட்டில் இதற்கு முன்னம் இருந்த கெளரவத்தைக் கருதுவோம். பூர்வ காலத்தில் நாடங்களை இழிபடக் கூறிய சந்தர்ப்பங்கள் நமக்கு கிடைத்தில உண்மையே. மணிமேகலையில் நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்’ என்று நாடகக் காப்பியங்களைப் பற்றி பெருமையுடன் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் தமிழ்நாட்டில் முக்கியமாகத் துதிக்கப்பட்டுவரும் தெய்வங்களாகிய சிவபெருமானுக்கும், மஹாவிஷ்ணுவுக்கும், ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய "சபாபதி” என்றும் "ரங்கநாதன்" என்றும் பெயர்கள் வழங்கிவருகின்றன. சபாபதி "நடன சபாபதி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/37&oldid=1287740" இலிருந்து மீள்விக்கப்பட்டது