பக்கம்:நாடகத் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

என்பதே மிகவும் சாதாரணமாய் வழங்கும் பெயர். மேலும் அவருக்குத் தேவாரத் திருவாசகப் பதிகங்களில் 'கூத்தன்' எனும் பெயரை மிகவும் சாதாரணமாக தமது சமய குறவர்கள் உபயோகித்திருக்கின்றனர். இருந்தபோதிலும் நாடகமாடுபவர்கள் மாத்திரம், எக்காலத்திலும் தாழ்வாகவே மதிக்கப்பட்டனர் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் "நாடகமேத்தும் நாடகக் கணிகை என்பதற்கு உரையெழுதுங்கால் நாடகம் தான் இவளாற் சிறப்பெய்துதலின் ஏத்திற் றென்றவாறு" என்று எழுதியிருப்பது இவ்விடம் கவனிக்கத்தக்கது. அக்காலத்திலும் கணிகையரே, பெரும்பாலும் நாடகம் நவிற்றினர் போலும். வடநாட்டில் பூர்வ காலத்தில் அரசரது புதல்விகளும் நாட்டியம் ஆடுவதற்குக் கற்றுக் கொண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறதுபோல, தமிழ் நாட்டில் அரசன் புதல்விகள் அக்கலை பயின்றதாக அப்படிக் கூறப்படவில்லை. ஒருகால் ஆதிகாலத்தில் அது இழி தொழிலாக எண்ணப்படாதிருந்த போதிலும், வர வர அது க்ஷீண திசைக்கு வந்துவிட்டது என்பதற்கு ஐயமின்று. தற்காலத்திலும் "கூத்தாடி” என்னும் பதமானது இழி சொல்லாகவே உபயோகப்பட்டு வருகிறது. ஆகவே பூர்வ கால முதல் நாடகங்களும், நாடகமாடுபவர்களும் அதிகமாய் மதிக்கப்படவில்லை என்பது திண்ணம். இங்ஙனமிருக்க, நம்முடைய பூர்வீக கவிசிரேஷடர்கள் தமிழ் பாஷையில் நாடக நூல்களை இயற்றாமற் போனது ஒர் ஆச்சரியமாகாது. தற்காலத்தில் ஒர் பெரும் தமிழ்ப் புலவர்பாற் சென்று 'தெம்மாங்கு' பாடல் ஒன்று பாடிக் கொடுக்க வேணுமென்று கேட்டால், எவ்வளவு இழிவாக அதை மறுப்பாரோ, அம்மாதிரி அக்காலத்து கவிவாணர் நாடகமெழுதுவதை இழிவாக நினைத்து எழுதாது விடுத்தனர் போலும். மேற்கூறியவை இன்னொரு கேள்விக்கும் தக்க பதிலைத் தருகிறதென நாம் நினைக்கலாம்.

ஆரியர் தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கிய அகஸ்தியர் காலம் முதல்,அவர்களுடைய நாகரீகத்திலுள்ள சாராம்சங்களே தமிழர் எடுத்துக் கொண்டாடினர் என்பது பூர்வீக சரித்திர ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுடைய கொள்கையாம். ஆரிய பாஷையாகிய சமஸ்கிருத பாஷையின் சாராம்சங்களையும் வேண்டுமிடத்து கிரகித்துக் கொண்டனர். முக்கியமாக இலக்கண நூல் என்பதே தமிழர் ஆரியர்களிடமிருந்து பெரும்பாலும் கற்றது, என்று தமிழபிமானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எல்லாம், சமஸ்கிரத இலக்கண நூல்களை ஒட்டி, இயற்றப்பட்டன வென்று நம்மவர் கொள்கை. இம்மாதிரியாகவே சமஸ்கிருத பாஷை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/38&oldid=1287741" இலிருந்து மீள்விக்கப்பட்டது