பக்கம்:நாடகத் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பது திண்ணம். அவைகளுக்குத் தாய் பாஷையாகிய சமஸ்கிரதத்திலேயே அந் நாடகங்கள் ஆடப்பாடாமலிருந்த பொழுது, அவைகளைத் தமிழில் மொழி பெயர்த்தாவது, அவைகளை ஒட்டித் தமிழில் நாடகங்கள் இயற்றவேண்டு மென்றாவது, நமது பூர்வீக தமிழ்க் கவிவாணருக்குத் தோற்றாமற்போனது ஓர் ஆச்சரியமன்றெனவே கூறல்வேண்டும். சமஸ்கிருதத்தில் காளிதாசர் செய்த சகுந்தலை எனும் நாடகமிருப்பதாக, தமிழர்க்கு சில நூற்றாண்டுகளுக்குமுன், வில்சன் (Wilson) எனும் ஆங்கிலேய அறிஞர், வெளியிட்ட பின்பு தான் சற்றேறக்குறைய தெரியலாயிற்றென்று கூறலாம். நாம் அறிந்தவரை முதல் முதல் உலகெங்கும் பிரசித்திப் பெற்ற அச் சமஸ்கிரத நாடகத்தை 'மறைமலை அடிகள்' எனும் பெயர் பூண்ட வித்வான் வேதாசலம் பிள்ளை அவர்கள் தான் சில வருஷங்களுக்கு முன் மொழிபெயர்த்தனர். அதற்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் கிருஷ்ணமிஸ்ரர் எனும் கவி இயற்றியப் 'பிரயோத சந்திரோதயம்’ எனும் நாடகத்தை தமிழில் காவியமாக திரு. வேங்கடமன்னன் என்பவர் இயற்றியுள்ளார். தற்காலம்தான் தமிழபிமானிகள் வடமொழியிலுள்ள மற்ற நாடகங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக மொழி பெயர்த்துக்கொண்டு வருகின்றனர்.

இனி ஒரு சாரார் தமிழ் பாஷைக்கு நாடகமென்பதே கிடையாது, எல்லாம் சமஸ்கிரதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது, என்று கூறும் ஆட்சேபனைக்கு விடையளிப்போம். அவர்களுடைய முக்கியமான ஆதாரம், இயல், இசை, நாடகம் எனும் முப்பிரிவில் நாடகம் என்னும் பதமே சமஸ்கிரதம் என்பதாம். நாடகம் எனும் பதம் சமஸ்கிருதமென்று நாம் ஒப்புக்கொண்ட போதிலும், பூர்வ காலத்தில் தமிழ் நாட்டில் 'கூத்து’ எனும் பதமே அதைக் குறித்ததாம். அன்றியும் இவ் வியாசத்தில் முதலில் எடுத்துக் கூறியபடி அகக்கூத்து புறக்கூத்து முதலிய பிரிவுகளிலெல்லாம் கூத்து என்னும் பதமே மிகுதியாய் உபயோகிக்கப்பட்டிருக்கிறதைக் காணவும். நாடகம் என்பதே கூத்தின் ஒரு பிரிவாம் கதை தழுவிவரும் கூத்து எனக் கூறப்பட்டிருப்பதையும் கவனிக்க

அன்றியும் சம்ஸ்கிருத இலக்கண நூலார், சம்ஸ்கிருத நாடகங்களை, ரூபகம் உபரூபகம் என்று பிரித்தபடி தமிழில் இல்லை. மேலும் ரூபகங்களே அவர்கள் நாடகம், பிரகரணம், பானம், வியாயோகம், சமவாகாரம், டிமம், ஈகாமிருகம், அங்கம், வீதி, பிரஹசனம் எனப் பிரித்தது போல் தமிழில் இல்லையென்றே சொல்லவேண்டும். உப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/40&oldid=1287743" இலிருந்து மீள்விக்கப்பட்டது