பக்கம்:நாடகத் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

இதில் கண்டிருக்கும் தருக்களுக்கு தாளங்கள் குறிப்பிடவில்லை. இதே கதையை பிரஹ்லாத நாடகமெனப் பெயரிட்டு எழுதப்பட்ட இன்னொரு நாடகச் சுவடியும் இங்குள்ளது.

(2) இராம நாடகம்: இதைப்பற்றியும் இதன் ஆசிரியரைப் பற்றியும் முன்பே கூறியிருக்கிறேன். இந்தப் பிரதி சம்பூர்ணமாயிருக்கிறது. பெயர்த்து எழுதியவர் குறையாக இதில் பல எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் கவனித்து இதனை ம-ள-ள-ஸ்ரீ திவான் பஹதூர் பவானந்தம் பிள்ளை அவர்கள் அச்சிட்டிருக்கிறார். இந்த ஓலைக்கட்டின் கடைசியில் உத்தர ராமாயண நாடகமும், மைராவண நாடகமும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் வசனநடை கிடையாது.

(3) உத்தரராமாயண நாடகம்: இதில் வெண்பா, விருத்தம், முதலியனவும் ராக தாளங்களோடு கூடிய தருக்களும் இருக்கின்றன. வசனம் கிடையாது. செய்யுள் நடை அவ்வளவு சிறந்ததாகத் தோன்றவில்லை. இதை இயற்றியவர் சுமார் 108 வருடங்களுக்கு முன்பிருந்த அநந்தர் எனும் ஓர் விப்பிரர். இதை அரங்கேற்றியது கலி 4921இல் என இதிலுள்ள ஒரு பாட்டினால் தெரிகிறது.

(4) கந்தர் நாடகம்: ஸ்காந்த புராணக் கதையை ஒட்டி எழுதப்பட்ட நாடகம்; சுப்பிரமணியர் பிறந்தது முதல் வள்ளியம்மை மணம் வரையில் நாடக ரூபமாக எழுதியிருக்கிறது. இதை இயற்றியவர் பாலசுப்பிரமண்யக் கவிராயர் என்பவர்; அரங்கேற்றியது கலி 4905ல்; இயற்றியது சுமார் 114 வருடங்களுக்கு முன்பாம். இதில் தர்க்கப் பாட்டுகளும் அடங்கியிருக்கின்றன, அதாவது நாடக பாத்திரங்கள் ஒருவர்க்கொருவர் பாட்டுகளினாலேயே பதில் உரைப்பதாம்.

(5) காத்தவராய நாடகம்: இதில் கதாநாயகனை காத்தவராயன் என்பான், நாரதர் தூண்டுகோளின் மீது மூன்று அழகிய பெண்களை மணந்த கதையை நாடகமாக எழுதப்பட்டிருக்கிறது. இதில் கட்டியக்காரனை வர்ணிக்கிற தருவில் "கோணங்கி குல்லாய் போட்டு காலில் சிலம்பணிந்து வேடிக்கைக் கட்டியக்காரன்" வருவதாக வர்ணித்திருப்பது கவனிக்கத்தக்கது. இதில் வசனமும் உண்டு. தருக்களுக்கு ராக தாளங்கள் குறிப்பிடவில்லை. இதை நோக்குமிடத்து இதை இயற்றியவர் இசைஞான மில்லாதவரா யிருக்கலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/57&oldid=1290152" இலிருந்து மீள்விக்கப்பட்டது