பக்கம்:நாடகத் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

அல்லது மற்றவர்கள் அதைக் கற்றால், அதனால் தங்களுக்கு வரும் ஊதியம் குறைந்துபோகும் எனும் எண்ணத்தினாலோ, மேற்கூறியவை போன்ற அநேகம் தமிழ் நாடகங்கள், இரகசியமாய் மற்றவர் கண்களுக்குப்படாமல் பாதுகாக்கப்பட்டு நாளாவர்த்தியில் நசித்துப்போயிருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமே யில்லை. இச்சந்தர்ப்பத்தில் வள்ளியின் கலியாணக் கதையானது வெகுநாளாய் நாடக ரூபமாக நமது தமிழ் நாட்டில் ஆடப்பட்டது என்பது கவனிக்கற்பாலது. சிலப்பதிகார உரையாசிரியர் காலத்திலேயே "வள்ளிக்கூத்து" என்று ஒரு தமிழ்க் கூத்து இருந்ததைமுன்பே குறித்திருக்கிறோம் முருகக்கடவுள் தமிழ் நாட்டிற்குரிய கடவுள் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே; அவர் வள்ளி நாயகியாரை மணந்த கதை ஆதிகாலம் தொட்டு நாடகமாக ஆடப்பட்டது ஆச்சரியமன்று. தற்காலத்திலும் அநேக சுப்பிர மணிய க்ஷேடித்திரங்களில் வள்ளி நாயகியின் மனத்தை உற்சவ காலங்களில் கோயில் தாசிகள் வேஷம் பூண்டு நடித்து வருவதைக் காணலாம். இன்றைக்கும் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோயில் உற்சவத்தில், ஒரு நாள் இக்கதையை நாடகமாக அக்கோயில் தாசிகள் "வேடர் பறி" எனும் உற்சவ தினத்தில் ஆடி வருகிறார்கள்.

முற்காலத்தில் ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும், அந்தக்ஷேத்திரத்தின் மஹாத்மியத்தை நாடக ரூபமாக ஆடுவதுண்டென்பதற்கு ஒரு உதாரணமாக புறம்பயம் என்னும் க்ஷேத்திரத்தில் ஆடப்பட்ட வன்னி நாடகம் எனும் ஒர் தமிழ் நாடகத்தைக் கூறலாம். புறம்பயம் எனும் க்ஷேத்திரம் கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு சிவஸ் தலம். இந்த வன்னி நாடகமானது பல வருஷங்களுக்கு முன்பு வரையில், வருஷாவருஷம் இவ்வூரில் ஆடப்பட்டதாக ம-ள-ள- ஸ்ரீ திரு மலைக்கொழுந்து பிள்ளை அவர்கள் பி. ஏ. கூறியிருக்கிறார்,

திருக்கழுக்குன்றம் எனும் பாடல் பெற்ற க்ஷேத்திரத்தில் அநேக வருஷங்களுக்கு முன், கோயில் உற்சவகாலத்தில் அந்த க்ஷேத்திரத்தின் கதையை நாடகரூபமாக சுரகுரு-நாடகம்” என்று கோயில் தாசிகள் ஆடி வந்தார்கள், தற்காலத்தில் என்ன காரணம் பற்றியோ அது நின்று விட்டது. இந்த சுரகுரு நாடகத்தை தமிழில் எழுதியவர் பேறை தசாவதானம் ஜெகந்நாத பிள்ளை என்று அறிகிறேன்.

இதற்கப்பால் இதிகாச புராணங்களிலுள்ள கதைகளை ஒட்டி தமிழில் எழுதப்பட்ட நாடகங்கள் அநேகம் உள்ளன. உதாரணங்களாக கீசக நாடகம், வாணாசுர நாடகம், பதினெட்டாம் போர் நாடக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/61&oldid=1290156" இலிருந்து மீள்விக்கப்பட்டது