பக்கம்:நாடகத் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

குறத்தி வந்து நீ அவரையே மணம் புரிவாய் என்று சொல்ல, பிறகு அப்பெண்மணி தான் காதல் கொண்டவரை அவ்வண்ணமே மணம் புரிவதும் காணாமற் போன குறத்தியைத் தேடி அவள் புருஷனை குறவன் அவளைத் தேடி கடைசியில் கண்டுபிடித்து சுகமாய் வாழ்வதும் கதையாகும், என்று முன்பே குறித்துள்ளேன். சற்றேறக் குறைய எல்லாக் குறவஞ்சி நாடகங்களும் இம்மாதிரியாகத் தானிருக்கும். இக்குறவஞ்சி நாடகங்களுள் மிகச் சிறந்தது குற்றாலக் குறவஞ்சியாம். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலில் மராட்டிய மன்னர்கள் கால முதல் ஒரு குறவஞ்சி நாடகமானது ஆடப்பட்டு வருகிறது. முன்பு கூறியபடி அக்கோயில் பிரம்மோத்சவத்தில் அஷ்டக்கொடி எனும் உற்சவ தினம் கோயில் தாசிகளால் இன்றைக்கும் ஆடப்பட்டு வருகிறது. இக்குறவஞ்சி நாடகம் இரண்டாவது சரபோஜ மஹாராஜா காலத்தியது. இதை எழுதியவர் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். இதன் ஏட்டுப் பிரதி தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மஹால் புத்தக சாலையிலிருக்கிறது. சுமார் 1840 வருஷம் பிரம்ம ஸ்ரீ கவிகுஞ்சரபாரதி அவர்கள் அழகர் குறவஞ்சி யெனும் தமிழ் நாடகத்தை எழுதியுள்ளார். இந்நாடகம் அவரது பேரப்பிள்ளையாகிய நா.கோடீஸ்வர ஐயரால் அச்சிடப்பட்டிருக்கிறது.



புதிய நடையில் எழுதப்பட்ட நாடகங்கள்

இனி காளிதாசர் பவபூதி முதலிய நாடகாசிரியர்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாடகங்களையும். ஷேக்ஸ்பியர் ஷெரிடன் முதலிய நாடகாசிரியர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்களையும் தழுவி தமிழில் எழுதப்பட்ட தற்காலத்திய நாடகங்களைக் கருதலாம். இவைகளில் பொதுவாகத் தெய்வ வணக்கம் தவிர பழைய தமிழ் நாடகங்களில் நாம் முன்பு குறித்தபடி, விநாயகர் ஸ்துதி, சரஸ்வதி துதி, அவையடக்கம், மங்களம், தோடயம் முதலியன கிடையாதென்றே கூறலாம். அன்றியும் சூத்திரதாரன் நடி முதலியவைகளும் கிடையா ; கட்டியக்காரன் என்பது கிடையவே கிடையாது. சம்ஸ்கிரத நாடகங்களைப்போல் அங்கங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அங்கமும் ஆங்கில நாடகங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/65&oldid=1540550" இலிருந்து மீள்விக்கப்பட்டது