பக்கம்:நாடகத் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

போல், களம் அல்லது காட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவைகளில் பொது வசனமாவது, பொது விருத்தங்களாலது கிடைக்கா. பழைய நாடகங்களில் ராக தாளங்கள் அமைத்த பாட்டுகள் அதிகமாய் இருந்தது போலல்லாமல், அப்படிப்பட்ட பாட்டுகள் ஆங்காங்கு சிலவாகப் புலப்படும். அன்றியும் பெரும்பாலும் வசன நடையில், அல்லது ஏறக்குறைய வாசக நடைக்குச் சமானமான அகவற்பாவில் எழுதப்பட்டுள்ளன.

மேற்கூறிய புதிய நடையில் எழுதப்பட்ட தமிழ் நாடகங்களுக்குள் முதலாக, காலஞ்சென்ற ம-ள-ள-ஸ்ரீ ராமசாமி ராஜூ என்பவர்கள் இயற்றிய 'பிரதாபசந்திர விலாசம்’ என்பதைக் கூறவேண்டும். இது 1877-ஆம் வருஷத்தில் எழுதப்பட்டது. இது தற்காலத்திய ஜன சமூக நாடகமெனக் கொள்ளலாம். இந்நூலாசிரியர் சம்ஸ்கிரதத்திலும் சிறந்த பாண்டித்யமுடையவரா யிருந்தமையால், ஆரம்பத்தில் சம்ஸ்கிருத நாடகங்களிருப்பதுபோல் சூத்திரதாரன், சூத்திர தாரன் மனைவி என்கிற இரண்டு பாத்திரங்களை அமைத்து அவர்கள் வார்த்தையின் முடிவில் நாடகத் தொடக்கத்தைச் சேர்த்திருக்கிறார். நான் இதுவரையில் ஆராய்ச்சி செய்ததில் இந்த நாடகத்தில் தான் முதல் முதல் அங்கம் களம் என்னும் பிரிவுகள் உபயோகப்பட்டிருக்கின்றன. இது 12 அங்கங்கள் அடங்கிய ஓர் நாடகமாம். இந்நாடகமானது சில சமயங்களில் ஆடப்பட்டிருக்கிறது. இதன் பின் 'நந்திதுர்க்கம்” என்னும் ஒர் நாடகத்தைப் பார்த்துள்ளேன். இது காலஞ்சென்ற டிஸ்டிரிக்ட் முன்சிபு T.T ரங்காசாரியார் பி.ஏ.பி.எல். அவர்களால் ஒரியன்டல் டிராமாடிக் சொசைடியாருக்காக எழுதப்பட்டது. இது இதுவரையில் நடிக்கப்படவில்லையென்பது என் அபிப்பிராயம், இது பெரும்பாலும் வசன நடையில் எழுதப்பட்டது. சில பாட்டுகளும் அடங்கியது.

இதன் பிறகு, காலஞ்சென்ற, தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற பி. சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன்மணியம்’ என்னும் நாடகத்தைத் கூறவேண்டும். இதை ஷேக்ஸ்பியர் மகா நாடககவி ஆங்கிலத்தில் பிளாங்க்வர்ஸ் (Blankverse) என்பதில் எழுதியது போல் தமிழில் அகவற்பாவால் இதை எழுதியுள்ளார். இது கற்றோர்களாலே மிகவும் சிலாகிக்கப்பட்ட நூல் என்றால் இதன் பெருமையைப்பற்றி நாம் அதிகமாய்க் கூற வேண்டிய நிமித்தியமில்லை. சென்னைக் கலாசாலைச் சங்கத்தாரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/66&oldid=1290212" இலிருந்து மீள்விக்கப்பட்டது