பக்கம்:நாடகத் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

இந்நாடகம் உயர்தரப் பரீட்சைகளுக்குப் படிக்க வேண்டி புஸ்தக்மாகப் பன்முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நாடகக் கதைக்கு முதனூல் ஆங்கிலத்தில் 'தி சீக்ரெட்வே' எனும் ஆங்கிலக் கதையாகும். இந்த ஆசிரியர் இயற்றியது தமிழ் நாடக வகுப்பில் இது ஒன்றேயாகும். தமிழ் பாஷையை மிகவும் பாராட்டிச் சீர்தூக்கி வந்தப் இப்புலவர் பெருமான், தனது 42 ஆவது வயதிலேயே எம்பெருமானடி சேர்ந்தது தமிழ் அகம் செய்த துர்ப்பாக்கியமே யாம், இன்னும் சில வருஷங்கள் உயிரோடிருந்திருப்பாராயின் இதுபோன்ற பல சிறந்த நாடகங்களையும் தமிழில் எழுதியிருப்பாரென எண்ணுவதற்கு இடமுண்டு. இந்நூலாசிரியர் தமது நூலின் முகவுரையில், ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த நாடகங்கள் இருப்பதுபோல், தமது தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் இல்லாக் குறையை ஒருவாறு தீர்க்கும் பொருட்டு இதை எழுதிய தாகக் குறிப்பிட்டிருக்கிறார், இந்நூலாசிரியர் காலஞ் சென்ற என் தந்தையாருக்கு மிக்க நண்பர். நான் இப்பொழுது வசிக்கும் வீட்டில், இவர் எம்.ஏ. பரீட்சைக்குப் போனபோது சில நாட்கள் வசித்திருந்தார். அக்காலம் நான் சிறிய வயதுடையவனுயிருந்தும் இவருடன் வார்த்தையாடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ஒரு முறை, இப்புஸ்தகம் அச்சிட்ட 1891 வருஷம், நானும் எனது நண்பர்களும் ஸ்தாபித்த சுகுண விலாச சபை எனும் நாடக சபையில், இதை ஆடக்கூடாதா என்று கேட்டனர். அதற்கு நான் இந்நூல் அகவற்பாவினால் புனையப்பட்டிருப்பதால் நாடகமேடையில் சாதாரண ஜனங்கள் நடிப்பதற்கும், நடிப்பதை பார்க்கும்போது ஜனங்கள் அர்த்தம் செய்து கொள்வதற்கும், கடினமாயிருக்குமே என்று பதில் உரைத்தேன். இக்கஷ்டத்தை முன்பே அறிந்தவராய்த் தான் அவரது முகவுரையில் வீட்டில் படிப்பதற்கே இந்நூல் எழுதப்பட்டது. நாடக மேடையில் ஆடுவதற்கன்று என்று எழுதியுள்ளார் போலும். இந்நாடகமானது நானறிந்த வரையில் மேடையின் மீது நாடகமாக ஆடப்பட்டிலது.

மேற்குறித்த 1891 வருஷம்தான் நான் முதல் முதல் தமிழ் நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன். நான் அறிந்த வரையில் வெறும் வசன நடையில் எழுதப்பட்டு அச்சிடப்பட்ட தமிழ் நாடகம் நான் இயற்றிய "லீலாவதி, சுலோசனை" எனும் நாடகமே. அவ்வருஷம் தொடங்கி இதுவரையில் எல்லாம்வல்ல இறைவன் அருளாலும் எனது தாய் தந்தையர்கள் கடாட்சத்தினாலும், இதுவரை (1959) ஏறக்குறைய 94 நாடகங்கள் தமிழில் வசன ரூபமாக எழுதியுள்ளேன் அவைகளைப்பற்றி தான் கூறுவது முறையன்றென விடுத்தனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/67&oldid=1290221" இலிருந்து மீள்விக்கப்பட்டது