பக்கம்:நாடகத் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

கவி ஆங்கிலத்தில் வரைந்த பல நாடகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் காலக்கிரமத்தில் முற்பட்டது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த காலஞ்சென்ற வேணு கோபாலாச்சாரியார் மொழிபெயர்த்த "வெனிஸ் வர்த்தகன்” என்பதேயாம். ஒரு பாஷையில் ஒரு கவி எழுதிய நாடகத்தை மற்றொரு பாஷையில் மொழி பெயர்ப்பது மிகவும் கடினமான காரியம், நூலாசிரியர் ஒவ்வொரு சொற்றொடரிலும் அமைத்துள்ள அருமையான விஷயங்களையெல்லாம் ஒன்றும் விடாது, மற்ருெரு பாஷையில் அமைத்து எழுதுவது, மிகவும் கஷ்டமான விஷயம் என்று இம்முயற்சியை எடுத்துக்கொண்டவர்களுக்குத் தான் தெரியும். வேணுகோபாலாச்சாரியார் என்பவர் இம்முயற்சியில் ஏறக்குறைய முற்றிலும் சித்தி பெற்றார் என்பது அவரியற்றிய நூலைப் படித்தால் தான் தெரியும். நான் எனது சிற்றறிவைக்கொண்டு, ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தழுவி, "வாணிபுர வணிகன்’ என்பதை எழுதியபொழுது, இந்நூலாசிரியர் முன்பு இயற்றிய மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் சகாயமாயிருந்தது என்னுடைய சொந்த அனுபவம் என்னவெனின், புதி தாய் ஒரு நாடகத்தை எழுதுவதைவிட, பழைய நாடகமொன்றை தக்கபடி மொழிபெயர்ப்பது, மிகவும் கடினமென்பதே! இந்நாடக ஆசிரியர் என்தந்தையின் காலத்திலிருந்தவர். இவரைப்பற்றி காலஞ்சென்ற என் அருமைத் தந்தை மிகவும் சிலாகித்து என்னிடம் பன்முறை கூறியுள்ளார். அன்றியும் இந்த வெனிஸ் வர்த்தகன் எனும் நாடகமானது 1909 வருஷம் எஸ். வி. கண்ணபிரான் பிள்ளை என்பவராலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஷேக்ஸ்பியர் மஹாகவியின் "மிட்சம்மர் நைட்ஸ் டிரீம்" என்னும் நாடகத்தை ஸ்ரீ எஸ். நாராயணசாமி ஐயர் என்பவர் "நடுவேனிற்கனவு’ என்று பெயரிட்டு தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். இது 1893 ஆம் வருஷம் அச்சில் வெளியாயிருக்கிறது. இந்நாடகக் கவியின் 'ஒதெல்லோ' எனும் நாடகத்தை காலஞ்சென்ற அ.மாதவையா அவர்கள் வெகு அழகாய் மொழி பெயர்த்திருக்கின்றனர். இதே நாடகத்தை பெயர்களை மாத்திரம் மாற்றி பி. எஸ். துரைசாமி ஐயங்கார் என்பவர் தமிழில் அமைத்து 'யுத்தலோலன்' என்று பெயரிட்டிருக்கின்றனர். இக்கவி எழுதிய நாடகங்களிலெல்லாம் மிகச் சிறந்தது 'ஹாம்லெட்' என்பதாம். அதை கே. வெங்கடராம ஐயரவர்கள் மொழிபெயர்த்து 1917-ம் வருஷம் வெளியிட்டிருக்கின்றனர். இந்நாடகத்தின் அமலாதித்யன் எனும் பெயருடைய தமிழ் அமைப்பு, என்னால் 1908-ம் வருஷம் அச்சில் வெளிடப்பயிட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/69&oldid=1290225" இலிருந்து மீள்விக்கப்பட்டது