பக்கம்:நாடகத் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

எல்லாவிதத்திலும் முற்பட்டது காளிதாச மகாகவி எழுதிய சாகுந்தலம் அல்லது காணாமற்போன கணையாழி என்னும் நாடகமே. இந்நாடகமானது அநேக ஐரோப்பிய பாஷைகளிலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, அன்றியும் எல்லாதேசத்தாராலும் மிகவும் புகழ்ந்து கொண்டாடப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடகாசிரியராகிய ஷேக்ஸ்பியருக்குச் சமானமாகச் சொல்லத்தக்க, கட்டெ (Goethe) என்பவர் இந்நாடகத்தின் அழகினையும் பெருமையும் மிகவும் வியந்து கூறியிருக்கின்றார். இந்நாடகமானது முதல் முதல் தற்காலம் மறைமலை அடிகள் என்றும் பூர்வாசிரமத்தில் வேதாசலம் பிள்ளை என்னும் பெயர் பூண்ட தமிழும் சமஸ்கிருதமும் நன்குணர்ந்த வித்வானால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதற்குப்பின்னர் ஸ்ரீ திவான் பஹதூர் எம்.எஸ்.பவாநந்தம் பிள்ளை அவர்களாலும் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இதை நானும் தமிழ் நாடகமேடைக்கு உதவும்படியாக தமிழில் அமைத்திருக்கிறேன். காளிதாச மஹா நாடககவியால் இயற்றப்பட்ட மற்றொரு நாடகமாகிய விக்கிரம ஊர்வசி எனும் நாடகம் எஸ்.ராஜா சாஸ்திரியாராலும், சருக்கை ராமசாமி ஐயங்காராலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நானும் தமிழில் இதை நாடகமாக ஆட விரும்புவோர்களுக்கு உபயோகமாகும்படி அமைத்திருக்கிறேன். இந்த சமஸ்கிருத நாடககவி இயற்றிய மூன்றாவது நாடகமாகிய மாளவிகாக்னிமித்ரம், வரகவி அ. சுப்பிரமணிய பாரதியாலும் என்னாலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய நாடகங்களையன்றி, வேணி சம்ஹாரம் என்னும் சம்ஸ்கிருத நாடகத்தை, எனது நண்பராகிய எஸ். ராகவாசாரியார் என்பவர் தமிழில் அமைத்திருக்கிறார். இது மஹாபாரதக் கதையை ஒருவாறு தழுவியதாம். அன்றியும் சம்ஸ்கிருத நாடகங்களில் வெகுபூர்வமானது என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.சூத்ரக கவியால் இயற்றப்பட்ட மிருச்சகடி என்னும் நாடகத்தையும் ராகவாசரியார் அவர்கள் தமிழில் அமைத்திருக்கின்றனர். இது இன்னும் அச்சிடப்படவில்லை, சீக்கிரம் அச்சுவாஹனம் ஏறுமெனக் கோருகிறேன். மேலும் பிரபோதசந்திரோதயம் எனும் மிகவும் கடினமான சமஸ்கிருத நாடகமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அன்றியும் பாசகவியும் பவபூதி எனும் கவியும் சம்ஸ்கிருதத்தில் இயற்றியுள்ள பிரபல நாடகங்களைத் தமிழ் அபிமானிகள் மொழி பெயர்த்து, தமிழ் நாடகமானது புஷ்டியடையுமென இறைவன் அருளைப் பிரார்த்திக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/71&oldid=1290234" இலிருந்து மீள்விக்கப்பட்டது