பக்கம்:நாடகத் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

விசாரித்தேன். தங்களுக்கெல்லாம் பாட்டும் அபிநயமும் கற்பித்த ஒரு உபாத்தியாயர் இருந்ததாகவும் அவர் சில வருஷங்களுக்கு முன்பு தான் காலமாய் விட்டதாகவும் தெரிவித்தார்கள்; அன்றியும் அவர்கள் பாடிய பாட்டுகள் மாத்திரம் ஓலைச் சுவடியில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆங்காங்கு பாட்டுகளின் மத்தியில் அவர்கள் பேசிய வசனங்களெல்லாம் தாங்களாகக் கதையைத் தழுவிச் சேர்த்துக்கொண்டதாம். இதனால் பழைய தமிழ் நாடகங்களில் பெரும்பாலும் பாட்டுகள் மாத்திரம் இருப்பதின் காரணமும், வசன நடையானது ஏகதேசமாயிருப்பதின் காரணமும் தெரிந்து கொள்ளலானேன். இக்கூத்தாடுவதானது தங்கள் இரண்டு மூன்று குடும்பங்களில் பரம்பரையாக வருகிறதாகச் சொன்னார்கள். கூத்தாடும் காலம் தவிர, மற்ற காலங்களில் ஒவ்வொருவனும், பயிர்த்தொழில் முதலிய தொழிலைச் செய்வதாகத் தெரிவித்தார்கள். இவர்களை அருகிற்பார்க்கும் பொழுது, வேஷதாரிகளெல்லாம் முகத்திற்கு மாத்திரம் வர்ணம் பூசியிருந்தார்கள். இராத்திரி அவர்களை தூரத்திலிருந்து பார்த்தபடியால் அது அவ்வளவாகத் தெரியாமற் போயிற்று. என்ன வர்ணங்கள் உபயோகிக்கிறீர்கள் என்று வினவியதற்கு, சாதாரணமாக அரிதாரமும் செந்தூரமும், கறுப்புப்பொடியுந் தான் என்று தெரிவித்தார்கள். அரிதாரம் முகத்திற்கு மஞ்சள் வர்ணம் கொடுப்பதற்கு, கரிப்பொடியை அரைத்து, புருவத்திற்கு கறுப்பு தீட்டுவதற்கும் உபயோகிப்பதாகக் கூறினார்கள். இவர்கள் உபயோகிக்கும் அரிதாரமும் செந்தூரமும் பண்டைக்காலம் தொட்டு கூத்தாடுபவர்கள் உபயோகித்து வந்ததாகப் பழைய நூல்களிலிருந்து நாம் அறிகிறோம். அவர்கள் முகத்தில் திட்டிய வர்ணங்கள் பகலில் பார்ப்பதற்க்கு அருவருப்பாயிருந்தபோதிலும், இரவில் சுமாராகத் தானிருந்தது. அரிதாரமும் செந்தூரமும் பழைய காலம் தொட்டு வேஷதாரிகளால் உபயோகப்பட்டு வருவதற்கு சிலப்பதிகார உரையே போதுமான அத்தாட்சியாம் வேஷம் தரிப்பதில் பட்டன வாசிகளாகிய நாடகக்காரர்கள் அதிகமாய் விருத்தியடைந்திருந்தபோதிலும், ஒரு விஷயத்தில் மாத்திரம் இந்தத் தெருக்கூத்தாடிகள் மேம்பட்டிருந்தனர். அதாவது மீசை தாடி முதலியவற்றை ஒட்டும் விதத்தில்; தற்காலம் நாகரீகமடைந்துள்ள வேஷதாரிகள், ஸ்பிரிட்கம், (spirit gum) என்னும் பிசினை இதற்காக உபயோகிக்கிறார்கள், இத்தெருக்கூத்தாடிகள் இதற்காக உபயோகிப்பது அத்திப்பாலாம், இந்த அத்திப்பாலினால் மீசை முதலியன ஒட்டிவிட்டால், அந்த இடத்தைவிட்டு அகலாது, எவ்வளவு அருகிலிருந்து பார்த்தபோதிலும் சுயமாகவே வளர்ந்ததுபோல் தோன்றுமேயன்றி ஒட்டியதாகத் தெரியவே தெரியாது. இத்தெருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/79&oldid=1296423" இலிருந்து மீள்விக்கப்பட்டது