பக்கம்:நாடகத் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கூத்தாடிகள் கல்வியறிவில்லாதவர்களாயிருந்தும் இவர்களில் சிலர் நாடகம் ஆடுவதில் முதிர்ச்சியடைந்தவர்களாயிருந்தார்கள், தெருக்கூத்துகளைக் குறித்துப் பேசுமிடத்து இரண்டு விஷயங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன, ஒன்று நான் நேரிற் கண்டது. மற்றொன்று நான் விசாரித்து உண்மையென அறிந்தது, ஒரு கிராமத்தில் மார்க்கண்டேயர் நாடகம் ஆடும்பொழுது யமன் வேஷம் பூண்டவன், தக்கபடி வேஷம் தரித்து, ஒரு எருமைக் காடாவின் மீது ஏறிக்கொண்டு, தப்பட்டைகள் முதலிய கோஷிக்க, தீவட்டிகள் இருபுறமும் பிடிக்க, நடுநிசியில் கிராமப் பிரதட்சிணம் செய்து கொண்டு பிறகு, கூத்தாடுமிடம் வந்து சேர்ந்தான். கருக்கிருட்டு தினத்தில் இதைக் காணும்பொழுது வாஸ்தவத்தில் எனக்கே கொஞ்சம் பீதியைக் கொடுத்தது. பிறகு விசாரிக்குமளவில் அநேக இடங்களில் மார்க்கண்டேயர் நாடகம் தெருக்கூத்தாடிகள் ஆடும்பொழுது இவ்வழக்கம் சாதாரணமாக உண்டெனவறிந்தேன். இத்தெருக்கூத்துகளைப்பற்றி விசாரித்துக்கொண்டு சில கிராமங்களுக்கு நான் செல்லுகையில் ஒர் ஊரில் வருஷ வருஷம் இரணிய விலாசம் நடப்பதாயும், சில வருஷங்களுக்குமுன் ஒரு சமயம் நரசிம்ம மூர்த்தி வேஷம் பூண்டவன் வாஸ்தவமாய்க் கொல்லத் துரத்திக்கொண்டு போனதாயும், பிறகு ஹிரணிய வேஷதாரியை ஓர் கிணற்றுக்குள் ஒளித்துவைத்து நரசிம்ம வேஷதாரியை சாத்தப்படுத்தினதாயும் கேள்விப்பட்டேன்; அவ்வூரிலுள்ள இரண்டு மூன்று பெரிய மனிதர்கள் இது வாஸ்தவம்தான் நாங்கள் நேரே பார்த்தோம் என்று கூறி, அக்கிணற்றையும் எனக்குக் காண்பித்தார்கள்; அவர்கள் என்னிடம் பொய்யுரைக்க ஏதும் காரணமில்லை. கோபாவேசத்தினாலோ அல்லது வேறு எக்காரணத்தினாலோ இப்படி நடந்திருக்கலாமென நான் நம்புகிறேன். தன் மெய்மறந்து ஒரு வேஷதசரி, ஆடுவானானால் அவன் இன்னது செய்வான் செய்யமாட்டான் என்று கூறலாகாது. தெருக்கூத்துகளைப்பற்றிப் பேசுமிடத்து சில கிராமங்களில் பிராம்மணர்கள் இக்கூத்தாடுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. தஞ்சாவூர் ஜில்லாவில் சூலமங்கலம் என்னும் ஒரு கிராமத்தில் விஷ்ணு ஆலயத்தில் வசந்தோற்சவ சமயத்தில் அக் கிராமவாசிகளாகிய சில பிராம்மணர்கள் மூன்று நாடகங்கள் பல வருஷங்களாக நடத்திவருகின்றனர். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் என்பவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு ஆடவனும் ஏதாவது வேஷம் இம்மூன்று நாடகங்களில் ஒன்றிலாவது போடவேண்டியது சம்பிரதாயமாம். இவர்கள் மார்க்கண்டேய நாடகத்தை நடத்தியதை நான் போய்ப் பார்த்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/80&oldid=1296428" இலிருந்து மீள்விக்கப்பட்டது