பக்கம்:நாடகத் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

இவ்வழக்கம் பரம்பரையாக அநேக வருஷமாக இக்குடும்பத்தில் நடந்துவருகிற வழக்கமெனக் கேள்விப்பட்டேன். சாதாரண தெருக்கூத்துகளைவிட இவர்கள் நாகரீகமாக நடத்தினர்.

நமது தேசத்தில் புராதனமான வழக்கங்கள் இன்னும் மாறாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக வருகின்றனவென்பதை யோசிக்கும் இடத்து முற்காலத்திலும் தமிழ் நாடகங்கள் ஏறக்குறைய இம்மாதிரியாகத்தான் நடந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கக்கூடுமெனத் தோன்றுகிறது,

இதன்பேரில் நாடகக்கொட்டகை ஒன்றை ஏற்படுத்தி, நாடக மேடையை நிர்மாணம் செய்து, அதில் காட்சிக்குக் காட்சி மாறும்படியான திரைகளைக்கட்டி தற்காலத்தில் வழங்கும்படியான முறையில் தமிழ் நாடகங்களை முதல்முதல் நடத்தியவர் காலஞ்சென்ற கோவிந்தசாமிராவ் என்பவர். இவர் தஞ்சாவூரைச் சார்ந்த ஓர் மஹாராஷ்டிரர், கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர். அப்படியிருக்கையில் பூனா நகரத்திலிருந்து "சாங்கிலி நாடகக் கம்பெனியார்” என்று ஒரு மகாராஷ்டிர நாடகக் கூட்டத்தார் தஞ்சாவூர் முதலிய இடங்களுக்குப் போய் சிலநாடகங்கள் நடத்தினார்கள். இதைப் பார்த்து நாடகமாடுவதில் உற்சாகம் பிறந்தவராய். கவர்ன்மெண்ட் உத்தியோகத்தைவிட்டு, தன்னுடன் மஹாராஷ்டிர வாலிபர்களைச் சேர்த்துக்கொண்டு தமிழ் நாடக கம்பெனி ஒன்றை ஏற்படுத்தி, அவ்வாலிபர்களையெல்லாம் நாடகமாடுவதில் பயிற்று வித்து தஞ்சாவூரில் சில நாடகங்களையாடி, பிறகு சென்னைக்கும் வந்து இங்கும் பலமுறை தமிழ்நாடகங்களை நடத்தினர்; இவரது நாடகக் கூட்டத்திற்கு "மனமோகன நாடகக் கம்பெனி' என்று இவர் பெயர் வைத்தபோதிலும், பெரும்பாலும் கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனி என்றே பெயர் வழங்கலாயிற்று. இவர் நடத்திய முக்கிய தமிழ் நாடகங்கள். ராமதாஸ் சரித்திரம், தாராசசாங்கம், பாதுகாபட்டாபிகேஷம், கோபிச்சந்து, திரெளபதி வஸ்திராபஹரணம், கர்ணவதம், அபிமன்யு யுத்தம், ஸ்திரீசாஹசம், சிறுத்தொண்டர் புராணம் முதலியன, கோவிந்தசாமி ராவ் மற்றவர்களை நாடக மாடுவதில் பயில்விப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததுமன்றி தானே வேஷம் தரித்து மேடையின் மீது வருவார், இவர் மேற்பூண்ட முக்கிய வேஷங்கள், ராமதாஸ் சரித்திரத்தில் நவாப்பும். தாராசசாங்கத்தில் பிரஹஸ்பதியும், பாதுகா பட்டாபிஷேகத்தில் பரதனுமாம். இவரது நாடகக் கூட்டத்தில் ஸ்திரீ வேஷம் பூணும் சுந்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/81&oldid=1296433" இலிருந்து மீள்விக்கப்பட்டது