பக்கம்:நாடகத் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

மென்பதனால், உற்பாதங்கள் நேரிடுங்காலை, அவை தம்மைப் பீடியா வண்ணம், அவ்வுற்பாதங்கள் தெய்வங்களின் கோபத்தினாலுண்டாயின வெனக்கருதி. அவைகளைச் சாந்தி செய்ய அத்தெய்வங்களைக் குறித்து சாந்திக் கூத்தானது ஆடப்பட்டது என்பதையும் அறிகிறோம். தற்காலத்திலும் கிராம தேவதைகளின் கோயில்களில் உற்சவங்கள் நடக்கும்பொழுது, தெருக்கூத்து என்று சொல்லப்பட்ட நாடகங்கள் நடிக்கப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது. அன்றியும் மழை முதலியன இல்லாத காலத்து, மழை பெய்யவேண்டி ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாட்டு பழமையான ஜனங்கள் கூத்தாடுவதுபோல், நம்முடைய நாட்டிலும் முற்காலத்தில் ஓர் விதமான கூத்தாடப்பட்டதென நாம் அறிவதற்கிடமுண்டு.

விநோதக் கூத்தென்பதைப்பற்றி இனி நாம் அறிந்ததைக் கருதுவோம். வினோதக் கூத்தென்பது மொத்தத்தில் வினோதத்தின் பொருட்டு ஆடப்படும் கூத்தெனப் பொருள்படும். இது முக்கியமாக குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, என அறுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது; இதனோடு வசைக்கூத்து யென்பதைக் கூட்டி, ஏழு பிரிவுடைத்து என்பாரும் உளர். அன்றியும் வெறியாட்டு என்பதைச் சேர்த்து ஏழு பிரிவுடைத்து என்பாருமுளர். இனி இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி அறிந்ததைக் கருதுவோம்.

குரவை என்பது பொதுவாகக் கைகோத்தாடல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிங்கள நிகண்டில் இதை ஓரை என்று கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் இதற்கு தழுவணரி என்றும் பெயருண்டு. (குறுந்தொகை). அடியார்க்கு நல்லார் குரவைக் கூத்தைப்பற்றி எழுதும்பொழுது "காமமும் வென்றியும் பொருளாக, குரவைச் செய்யுள் பாட்டாக, எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின் மரேனும் கைபிணைத் தாடுவது" என்று வரைந்துள்ளார். அன்றியும் இதை வரிக்கூத்தின் ஓர் உறுப்பாகக் கூறியுள்ளார். இதனால் குரவைக் கூத்தின் பொருள், காதல் அல்லது வெற்றியாக இருக்க வேண்டுமென்றும், இக்கூத்தானது பலர் கூடி வட்டமாக நின்று ஆடியது என்பதையும் அறிகிறோம். சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகியை, வேங்கை நிழற்கண் கண்டதற்கு, உற்பாத சாந்தியாக முருகவேளை நோக்கி குறத்தியர் இக்குரவைக் கூத்தாடியதாகக் கூறப்பட்டிருப்பதால், குறத்திகள் இக்குரவைக் கூத்தாடும் வழக்க முண்டென்றும், இது உற்பாத சாந்தியாக ஆடும் வழக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/9&oldid=1285053" இலிருந்து மீள்விக்கப்பட்டது