பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

85


களுள் இவ்விரண்டும் மிகுந்த குறைவான தரம் ஆடப்பட்டன வென்றே சொல்ல வேண்டும். இவ் விரண்டு நாடகங்களையும் அநேக வருஷங்கள் பொறுத்தே அச்சிட்டேன். “சுந்தரி” ஒன்பது வருஷங்களுக்கு முன் இரண்டாம் பதிப்பு ஏற்றது. “புஷ்பவல்லி”யை இரண்டாம் முறை போன வருடந்தான் அச்சிட்டேன். இவை இரண்டும் அவ்வளவாகச் சிறந்த நாடகங்களாக இல்லாவிட்டாலும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் எழுதிய இந் நாடகங்களை, மறுபடி அச்சிடுவதற்காக நான் படிக்கவேண்டி வந்தபொழுது, இவைகள் எனக்கொருவிதமான சந்தோஷத்தைத் தந்தனவென்றே கூறவேண்டும். நாடகம் எழுதுவதில் பிறகு நான் கொஞ்சம் தேர்ச்சி பெற்றவனாகிய போதிலும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் இவ்விரண்டு நாடகங்களையும் எப்படி எழுதினேனோ, அப்படியே ஒருவார்த்தையையும் மாற்றாமல் அச்சிட்டேன். இவ்விரண்டு நாடகங்களையும் விட்டுப் பிரியுமுன் அவைகளைப் பற்றி இன்னொரு வார்த்தை கூற விரும்புகிறேன். அதாவது புதிதாய் ஏற்படுத்தப்படும் நாடக சபைகளும், பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களும், முதல் முதல் ஏதாவது நாடகம் ஆட எடுத்துக்கொள்ள விரும்பினால், இவைகளில் ஒன்றை எடுத்துக்கொள்வது சௌகர்யமாயிருக்கும் என்பதேயாம். இவ்விரண்டு நாடகங்களையும் அதிகக் கஷ்டமில்லாமல் ஆடலாம்.

ஏழாம் அத்தியாயம்

பிறகு நான் மூன்றாவதாக எழுதிய நாடகம் “லீலாவதி சுலோசனா” என்பதே. இதுதான் நர்ன் எழுதிய நாடகங்களுக் கெல்லாம் மிகச் சிறந்தது என்று எனது பால்ய நண்பரும், ஹைகோர்ட் வக்கீலாகி நற்பெயரெடுத்து பிறகு ஹைகோர்ட் ஜட்ஜாகி, ராஜினாமா கொடுத்து விட்டு, இப்பொழுது அட்வகேட்டாக இருக்கும் மகா-ள-ள-ஸ்ரீ ஸ்ரீனிவாசஐயங்கார் எண்ணுகிறார். இவர் நாடகங்களைப் பரிசீலனம் பண்ணுவதில்