பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நாடக மேடை நினைவுகள்


மிகுந்த நிபுணர்; இவரை அநேக விஷயங்களில் எனது ஞானாசாரியனாகக் கொண்டு நடந்து வருகிறேன். ஆகவே இவர் புகழ்ந்ததை நான் ஒப்புக் கொள்ள வேண்டிய வனாயிருக்கிறேன். அன்றியும் இந் நாடகமானது எங்கள் சுகுண விலாச சபையில் ஏறக்குறைய 50 தடைவைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளினாலும் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. என்னுடைய அனுமதியின் பேரில், எனது இன்னின்ன நாடகம் இத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறது என்று நான் ஒரு ஜாபிதா வைத்திருக்கிறேன்; அதன்படி இந்த லீலாவதி-சுலோசனா இதுவரையில் 336 முறை ஆடப்பட்டிருக்கிறது. எனது உத்தரவில்லாமல் எத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறதோ நான் அறியேன். இப்பொழுது சாதாரணமாக மற்ற சபையார் என் உத்தரவில்லாமல் என் நாடகங்களை ஆடுவது வழக்கமில்லாவிட்டாலும், பல வருஷங்களுக்கு முன் அப்படிச் செய்வது சாதாரணமாயிருந்த தென்பதற்குச் சந்தேகமில்லை. சில வருஷங்களுக்கு முன் ஒரு நாடகக் கம்பெனி மாத்திரம் இந்நாடகத்தை ஒரு வருஷத்தில் ஆறுமுறை என் உத்தரவின்றி நடித்ததாகக் கண்டு பிடித்தேன். ஆகவே மற்ற சபைகளும் நாடகக் கம்பெனிகளும் இந் நாடகத்தைக் கணக்கில்லாதபடி, பலமுறை ஆடியிருக்க வேண்டுமென்பதற்கு ஐயமில்லை.

அன்றியும் இந்த “லீலாவதி-சுலோசனா” தான் நான் முதல் முதல் அச்சிட்ட நாடகம். இதை என்னை அச்சிடும்படித் தூண்டியவர் எனதருமை நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார வர்களே. இதை 1895ஆம் வருஷம் ஜனவரி மாதம் அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அதற்கு முன்பாக, தமிழ் நாடகத்தை அச்சிட்டால் யார் வாங்கிப்படிப்பார்கள் என்று மிகவும் சந்தேகப்பட்டதனால், இதை அச்சிட வேண்டும் என்னும் தீர்மானம் என் மனத்தில் உதிக்கவேயில்லை . எனது நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், “நீ எண்ணுவது தவறு, அச்சிட்டுப் பார், எத்தனை பெயர் வாங்கிப் படிக்கிறார்கள் பார்” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் என் தந்தையைக் கேட்டபொழுது அவரும் அப்படியே சொன்னார்.

அதன்மீது 1894ஆம் வருஷம் கடைசியில் இதை அச்சிடத் தொடங்கி 1895ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெளியிட்டேன். பகிரங்கமாக வெளிப்படுத்து முன், சில பிரதிகளைச்