பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாடக நடிகர்கள் மது அருந்தக் கூடாது என்றும், தன்னைக் காட்டிலும் நடிப்பில் சிறந்தவர்கள் இல்லை என்ற ஆணவம் கொள்ளக் கூடாது என்றும், தன்னோடு நடிப்பவர்களுடன் ஒத்த மனப்பான்மையோடு பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நாடக நடிகர்கள் தீய பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை மேற்கொண்டால்தான் அவர்கள் வாழ்வு செம்மை பெறும் என்றும், சமூகத்தில் அவர்கள் உயர்வாகக் கருதப்பெறுவர்கள் என்றும் நெறிப்படுத்தியுள்ளார்.

‘சுகுண விலாச சபையில் சேர வரும் நடிகர்கள் முதலில் சிறிய பாத்திரங்களையே ஏற்று நடிப்பர். பின்னரே அவர்கள் பெரிய பாத்திரங்களை ஏற்று நடிப்பர். இந்நிகழ்ச்சியைப் பம்மல் சம்பந்தனார் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடகத்தில் நடிக்க வருபவர்கள் உடனடியாகத் தலைவனாகவும், தலைவியாகவும் நடிக்க வேண்டும் என்று விரும்புவது தவறு என்பதை, ‘மெத்தையில் படிப்படியாக ஏறுவதை விடுத்து ஒரே மூச்சாக ஏற முற்பட்டால் கால் ஒடிந்து விடும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

நாடகக் கலைஞர், நியாயமான கருத்தைக்கூட பிறர் மனம் கொள்ளக் கனிவாகக் கூறவேண்டும். அதற்கு மாறாக முரட்டுத்தனமாகக் கூறினால் அந்த நியாயமான கருத்துக்கூட வெற்றி பெறாமல் போய்விடும் என்று பம்மல் சம்பந்தனார் இந்நூலில் கூறியுள்ள அறிவுரை எல்லோரும் பின்பற்றத்தக்கதாகும்.

‘நாடகக் கலைஞர்கள் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்துடையவர் பம்மல் சம்பந்தனார். ‘ஒருவருக்கு நூறு ரூபாய் வருமானம் என்றால் 99 ரூபாய் 15 அணா செலவு செய்துவிட்டு மீதியைச் சேமிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.’ அதை விடுத்து நூறு ரூபாய் முழுவதையும் செலவு செய்யக்கூடாது. அவ்வாறு செலவு செய்கின்றவர்கள் வாழ்வில் துன்பப்படுவர் என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் கூறப்படுகின்ற அறிவுரை என்றே கருதலாம்.

நாடக அரங்கேற்றம் என்பது பல்துறைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவாவது. எனவே நடிகர்கள் அனைத்துக் கலைஞர்களையும் மதித்துப் பழகத் தெரிய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
 உயிரினும் ஓம்பப் படும்

என்ற வள்ளுவர் குறளுக்கு ஏற்ப நடிகர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப் பாட்டுடனும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாடக அரங்கேற்றம் சிறப்பாக அமைய, அரங்க வடிவமைப்பும் திரைச்சீலை ஒப்பனையும் காட்சிக்குரிய பொருள்களும் பெருந்துணையாக அமைகின்றன. இவற்றின் ஏற்றமுறு பங்கினையும் நடிகர்கள் பேச வேண்டிய, நடிக்க வேண்டிய முறையினையும் சிறப்பான நிலையில் விளக்கியுள்ளார். திரை இழுக்க வேண்டிய முறையினைக்கூட விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.