பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

நாடக மேடை நினைவுகள்




கண்ட கூத்தாடிகளின் நடையுடை பாவனைகள் என் மனத்திற்கு உண்டாக்கிய ஜிகுப்சையேயென்று நினைக்கிறேன். அன்றியும் என்னுடைய தகப்பனார் என்னைத் தன்னுடன் நுங்கம்பாக்கம் பழைய காலேஜ் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஆங்கிலேய நாடகங்கள் ஐரோப்பியரால் நடிக்கப்பட்டபோது அழைத்துக் கொண்டு போயிருந்தார். அவர்கள் பூண்ட வேஷங்களையும், நான் மேற்கூறிய தமிழ்க் கூத்தாடிகளின் வேஷங்களையும் ஒத்திட்டுப் பார்க்கும் பொழுது, எனக்கு அக் காலத்திய தமிழ் நாடகங்களின்மீதும் அதனை ஆடுவோர்மீதும் விருப்பமில்லாமலிருந்தது ஓர் ஆச்சரியமன்று. அங்ஙனமிருக்க, அந்த வெறுப்பு நீங்கி, தமிழ் நாடகங்கள் மீது விருப்புண்டாகி, இது வரையில் சற்றேறக் குறைய அறுபது தமிழ் நாடகங்களுக்குக் கர்த்தாவாகும்படி என் மனம் மாறியதற்குக் காரணங்களையறிய இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்புவார்கள் என்று நம்பி இக்கதையை எழுத விருப்பங் கொண்டேன்.

நான் தமிழில் நாடகங்கள் எழுதுவதற்கு அஸ்திவாரமாயிருந்த முதற் காரணம், நான் சிறுகுழந்தையாயிருந்தபோது நான் உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான சக்தி குறைவாயிருந்ததே என்று உறுதியாய் நம்புகிறேன். இதை அநேகர் நம்புவது கடினம்; ஆயினும் இது உண்மையே! சற்றேறக்குறைய எனது ஒன்பதாம் வயது வரையில் அடிக்கடி, இரவு போஜனம் செய்தவுடன், அது செரிக்காமல் நான் வாந்தியெடுப்பது வழக்கம். அதைத் தடுக்கும் பொருட்டு, எனது தாயார் ஒரு கதை சொல்லி எனக்கு உணவு ஊட்டுவது வழக்கம். கூறிய கதையையே கூறினால் எனக்கு அதில் வெறுப்புண்டாகுமென அறிந்து என் மாதா அவர்கள் சற்றேறக் குறைய தினம் ஒரு புதுக் கதையாகச் சொல்ல முயல்வார்கள். இவ்வாறாக எனது ஒன்பதாவது வயதுக்குள் ராமாயணம், பாரதம், ஸ்காந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய இதிகாச புராணங்களிலுள்ள கதைகள் எல்லாம் அமிர்தம் போன்ற அவர்களது வாய்ச்சொற்களால் என் செவியால் உண்டேன். இதனால் என் மனத்திற்கு அக்கதைகளின்மீது பெரும் விருப்பமும் அக்கதா நாயகர்களின் மீது பெரும் ஆர்வமும் உண்டாயிற்று. அவை என் மனத்திற்கு பெருங்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கியது