பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நாடக மேடை நினைவுகள்


அவர்களுக்கு நற்கதி வாய்க்குங்கால் குதூஹலமடைவேன்; இது பிற்காலத்தில் நான் நாடகங்ககள் எழுதுவதற்கு மிகவும் பிரயோஜனப்பட்டது மன்றி, நாடகங்களை நடிப்பதற்கு எனக்குப் பேருதவியாயமைந்தது. ஷேக்ஸ்பியர் மகாகவி யெழுதிய நாடகங்களின் கதைகளை லாம்ப் (Lamb) என்பவர் வசன ரூபமாக எழுதிய புஸ்தகத்தை நான் வாசித்த பொழுது, அதில் மெக்பெத் (Macbeth) என்னும் துக்ககரமான கதையைப் படிக்குங்கால், டங்கன் (Duncan) கொலையுண்ட பாகத்தை நான் முதல் முதல் படித்த பொழுது, தனியாய் நான் மேல் மாடியில் என் தகப்பனாருடைய மேஜையருகில் படித்துக் கொண்டிருந்த அப்புஸ்தகத்தை மூடாமலும் விட்டு, பயந்து, படபடத்த மார்புடன் என் தாயாரிருக்குமிடம் நான் ஓடியது, இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது. மஹாபாரதத்தில் துரோண பர்வத்தில் பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொலையுண்ட கதையை வாசித்த பொழுது, என்னையும் அறியாதபடி கண்ணீர் தாரை தாரையாக எனக்குவர, அருகிலிருந்த எனது அத்தையும் சிற்றன்னையும் என்னை “ஏன் அழுகிறாயிப்படி, இது கதைதானே” என்று தேற்றியது இன்னும் என் ஞாபகத்தில் நேற்று நடந்தது போல இருக்கிறது.

மேற்கூறியவைகள் அன்றி, மற்றொரு காரணம் அடியில் வருமாறு:- நான் சிறுவனாயிருந்தபொழுது பள்ளிக்கூடங்களில் வருஷோற்சவக் கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆங்கிலேய கவிகள் இயற்றிய கிரந்தங்களிலிருந்து சிலபாகங்களை ஒப்புவிப்பது வழக்கம்; அப்படி நன்றாய் ஒப்புவிக்கும் சிறுவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதும் வழக்கம். இம்மாதிரியான பரீட்சைகளில் நான் சிறுவயது முதல் தேர்ந்தவனாய் பல பரிசுகள் பெற்றேன். இதனால் ஆங்கில நாடகங்களின்மீது எனக்கு அதிக விருப்பம் ஜனித்தது. அக்காலத்தில் கலாசாலைகளில் வாசிக்கும் மாணவர் வருடந்தோறும் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய நாடகங்களை ஆங்கிலேயத்தில் நடிப்பார்கள். அந்நாடகங்களையெல்லாம் தவறாமல் நான் போய்ப் பார்த்து வருவேன்; அப்படி மற்றவர்கள் நடிப்பதை நான் பார்க்கும் பொழுதெல்லாம் நாமும் அப்படி நடிப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே என்று ஏக்கமுறுவேன். அக்காலத்தில்