பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

7


என் விளையாட்டுத் துணைவர்களாயிருந்த என் நேர் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரியும் நானுமாக, நாங்கள் பார்த்த சிறுநாடகங்களை எல்லாம், விளையாட்டாக வீட்டில் எங்கள் தகப்பனார் வெளியில் போயிருக்கும் சமயம் பார்த்து நடிப்போம். ஒருமுறை ஒரு ஆங்கில சர்க்கஸில் நாங்கள் பார்த்த “டிக்டர்ப்பின் என்னும் திருடன் யார்க் பட்டணத் துக்குக் குதிரைச் சவாரி செய்தது” (Dick Turpin's ride to York) என்னும் நாடகக் கதையை, வசனரூபமாக நான்கு ஐந்து காகிதங்களில் நான் எழுத, அதை நாங்கள் காகிதத்தினால் ஒரு திரைசெய்து, அதன் முன் நடித்தது எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது.

ஆயினும் மேற்கண்ட காரணங்களால் ஆங்கில நாடகங்களின் மீது எனக்குப் பெரும் உற்சாகம் உண்டாயதேயொழிய, தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு கொஞ்சமேனும் குறையவில்லை . என்தாயாதியாகிய ஒரு சிறுவன், அக்காலத்தில், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட மூங்கில் கொட்டகையில், அக்காலத்தில் ஹரிச்சந்திரனாக நடிப்பதில் தனக்குச் சமமானவர்கள் இல்லையென்ற கீர்த்தி பெற்ற சுப்பராயாச்சாரி, வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஹரிச்சந்திர நாடகம் நடத்து வதைப் போய்ப்பார்ப்பதுண்டு. அத்தாயாதி என்னைத்தன்னுடன் வரும்படி என்னை அழைப்பதுண்டு. அப்படி நான் அழைக்கப்படும் பொழுதெல்லாம், தமிழ் நாடகங்களைப் பற்றி இழிவாகப் பேசி அவைகளைப் பார்க்க எனக்கிஷ்டமேயில்லை என்று நான் கூறுவேன். இவ்விஷயம் நான் முன்பு குறிப்பிட்டபடி, என் சம வயதுடைய நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமாயிருந்தது.

தமிழ் நாடகங்களின்மீது இருந்த இந்த வெறுப்பு மாறி, தமிழ் நாடகங்களை நான் எழுத வேண்டுமென்றும், அவைகளில் நடிக்கவேண்டுமென்றும் எனக்குப் பெரும்பிரீதி உண்டானதற்கு முக்கியமான காரணம், என்னுடைய பதினெட்டாம் வயதில், (1891), சென்னையில், பல்லாரியிலிருந்து காலஞ்சென்ற மா-ள-ள-ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு என்பவர், “சரச வினோதினி சபா” என்னும் தனது நாடகக் கம்பெனியாருடன் வந்து, விக்டோரியா பப்ளிக் ஹாலில் அவ்வருஷம் நான்கைந்து நாடகங்கள் தெலுங்கு பாஷையில் நடத்தியதேயாம். இக்காரணம் நான் தமிழ் நாடகாசிரியன் ஆனதற்கு ஒரு முக்கியமான காரணமாயிருந்தபடியால் இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.