பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

9


எப்படிக் கேட்பதென்று நான் கொஞ்சம் சங்கோசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, மறுநாள், என் தந்தையாருடைய நண்பர் ஒருவர் அந்த கிருஷ்ணமாச்சரியார் அவர்களையே எங்கள் வீட்டிற்கு என் தகப்பனாரிடம் அழைத்துக் கொண்டு வந்தார். அப்பொழுது நான் பார்த்த அவரது உருவம் இன்னும் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அப்பொழுது அவர் வாலிபம் கடந்து முதிர் வயதுடையவராயிருந்தார்; இருந்தும் தலையில் பிள்ளைகள் அணியும் ஒரு சரிகைத் தொப்பியை அணிந்திருந்தார். கிருஷ்ண மாச்சாரியார் என் தகப்பனாரை அன்றிரவு தான் நடத்தப் போகும் “சிரகாரி” என்னும் நாடகத்திற்கு அழைத்தார். என் தகப்பனார் என்னையும் என் நேர் தமயன் ஆறுமுக முதலியாரையும் அழைத்து நீங்களும் வருகிறீர்களா? என வினவினார். நாங்கள் இருவரும் மிகுந்த குதூஹலத்துடன் ஒப்புக்கொண்டோம். அன்றிரவு விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அந் நாடகத்தைப் பார்க்க என் தகப்பனாருடன் என் சகோதரனும் நானும் சென்றோம். எங்களுக்கெல்லாம் ரிசர்வெட் டிக்கட்டுகள் இருந்தபடியால், நாடக ஆரம்பத்திற்கு சில நிமிஷங்களுக்கு முன்புதான் போனோம். நாங்கள் போன பொழுது விக்டோரியா ஹாலில் இடமில்லாதபடி ஏராளமாக ஜனங்கள் வந்திருந்தனர். எங்களுக்கு ரிசர்வெட் டிக்கட்டுகள் இல்லாவிட்டால் இடம் கிடைத்திருக்காதெனவே நம்புகிறேன். ஹாலில் நுழைந்தது முதல் நாடகம் முடியும் வரையில், சற்றேறக்குறைய 5 மணி நேரமான போதிலும், நாடக மேடையை விட்டு என் கண்களை எடுத்தவனன்று. அரங்கத்தின் முன்னாகக் கட்டப்பட்டிருந்த திரையானது மேலே சென்றது முதல், கடைசியில் நாடகம் முற்றிய பொழுது, அது மறுபடியும் விடப்பட்டதுவரையில் நான் கண்டகாட்சிகள் பெரும்பாலும் என் ஞாபகத்தில் இன்றும் மறையாதபடி இருக்கின்றன. நாடகமானது தெலுங்கு பாஷையில் நடத்தப்பட்ட போதிலும், அக்காலம் இப்பொழுது அப்பாஷையிலிருக்கும் கொஞ்சப் பயிற்சியும் இல்லாதவனாயினும், சற்றேறக் குறைய நடிக்கப்பட்டதையெல்லாம் கதையின் வரலாற்றைக் கொண்டு ஆவலுடன் கிரஹித்து வந்தேன். அதுவரையில் பகல் வேஷக்காரர்கள் முகங்களில் அரிதாரத்தை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு வருவதைக் கொண்டு நான்