பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

நாடக மேடை நினைவுகள்


அருவருப்புற்றேன் என்று முன்பே கூறியிருக்கிறேன் அல்லவா? அன்று அப்படி அசங்கியமாக ஒன்றுமிராது, நாடகப் பாத்திரங்களெல்லாம் வெகு அழகாய் வேடம் புனைந் திருந்தனர். ஸ்திரீவேஷம் பூண்டவர்கள் நான் ஸ்திரீகளே என்று சந்தேகிக்கும்படி இருந்தது. சங்கீதத்தில் எனக்கு அச்சமயம் ஒருவிதப் பயிற்சியும் இல்லாதபோதிலும் அவர்கள் பாடிய பாடல்கள் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை விளைத்தது. நாடகப் பாத்திரங்கள் நடித்ததும் எனக்கு மிகவும் திருப்தியைத் தந்தது; நாடக ஆரம்பமுதல் கடைசிவரை, நாடக மேடையையன்றி நான் வேறொன்றையும் கவனித்தவன் அன்று; என் பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தது என்றுகூடப் பார்த்தவனன்று ; நாடகம் முடிந்தவுடன், சற்றேறக்குறைய முன்பு கூறியபடி ஐந்து மணி நேரம் ஆனபோதிலும், முடிந்துவிட்டதே என்று வருத்தமுற்றேன். பிறகு தகப்பனாருடன் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்குவதற்காக என் படுக்கையில் படுத்தும் ஏறக்குறைய விடியுமளவும் அன்று நான் உறங்கினவன் அன்று; நாடகமேடையில் கண்ட ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் அவர்கள் நடித்ததைப் பற்றியும் திருப்பித் திருப்பி என் மனத்தில் வியந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். அன்றிரவு எப்படியாவது நானும் நாடக சபையில் அவர்களைப் போல் நடிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு பெரும் அவா பிறந்தது. அன்றிரவே, பிறகு ஆந்திர நாடகப் பிதாமகன் எனும் பட்டப்பெயர் பெற்ற, இந்த கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எப்படி தெலுங்கில் ஒரு நாடக சபை ஏற்படுத்தி நடித்தாரோ, அம்மாதிரியாகவே தமிழில் ஒரு நாடக சபை ஏற்படுத்தி நான் அதில் நடிக்கவேண்டுமென்று உறுதியான தீர்மானம் செய்து கொண்டேன். அன்று முதல் இன்று வரை சற்றேறக்குறைய நாற்பது வருடங்கள் கழிந்தன. இந்த நாற்பது வருடங்களில், அன்று செய்த தீர்மானத்தை நிறைவேற்றி என்னை ஒரு தமிழ் நாடக ஆசிரியனாக்கியது, எல்லாம் வல்ல கருணைக் கடவுளின் கிருபையும் என் பெற்றோர்கள் அனுக்கிரஹமுமென்றே உறுதியாய் நம்புகிறேன். இத்துடன் இக்கதையை முடித்து, பிறகு நான் சுகுணவிலாச சபையை ஸ்தாபித்ததும், என்னுடைய முதல் நாடகத்தை எழுதினதும் இதை வாசிக்கும் என் நண்பர்களுக்கு இனி தெரிவிக்கிறேன்.