பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இரண்டாம் அத்தியாயம்

னது ஆயுளில் 1891 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி ஒரு முக்கியமான தினமாம். அதற்குக் காரணம், நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இன்றியமையாத முக்கியக் காரணமாயிருந்த “சுகுண விலாச சபை"யானது அத்தேதியில் சென்னையில் ஸ்தாபிக்கப் பட்டதேயாம். ஆகவே “சுகுண விலாச சபை’ ஸ்தாபிக்கப்பட்ட விருத்தாந்தத்தைச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன். மேற்கண்ட தேதியில் ௸ சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள் ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார், வி. வெங்கட கிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை , த. ஜெயராம் நாயகர், ஜி.இ. சம்பத்து செட்டியார், சுப்பிரமணிய பிள்ளை , நான். மேற்கண்டவர்களில் முதல் மூவர்கள் காலகதியடைந்து விட்டனர். சம்பத்து செட்டியாரும், சுப்பிரமணிய பிள்ளையும் சபையைவிட்டு இடையில் நீங்கி விட்டனர். ஜெயராம் நாயகரும் நானும் சற்றேறக்குறைய 40 வருடங்களாக அச்சபைக்கு உழைத்து வருகிறோம்.

சென்னையில் “சுகுண விலாச சபை” ஸ்தாபிக்கப்பட்டதற்கு ஆதி காரணம், பல்லாரி கிருஷ்ணமாச்சார்லு என்பவர் இவ்விடம் பல்லாரியிலிருந்து வந்து விக்டோரியா ஹாலில் தெலுங்கு பாஷையில் நான்கு ஐந்து நாடகங்கள் நடத்தினதேயாம் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சார்லு அவர்கள், அக்காலத்தில் ஏற்படுத்திய “சரச வினோத சபையார்” தெலுங்கில் அச்சமயம் ஆடிய நாடகங்களைப் பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன். அந்நாடகங்களைக்கண்ணுற்ற சிறுவர்கள் மனத்தில் அப்படிப்பட்ட நாடக சபை ஒன்று சென்னையில் ஸ்தாபிக்க வேண்டுமென்று யோசனை பிறந்தது சகஜமே. அப்படிப்பட்ட எண்ணங்கொண்டவர்களுள் மேற்கண்ட எழுவரும் ஒரு பிரிவினராவர். அவர்களுள் வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் ஒருதினம் நான் அப்பொழுது வசித்துவந்த ஆச்சாரப்பன்வீதி 54 ஆம் நெம்பருடைய வீட்டிற்கு வந்தார். அச்சமயம் சரசவினோத சபையாருடைய கடைசி நாடகமாகிய சிரகாரி எனும் நாடகத்தைக்கண்ணுற்று அப்படிப்பட்ட