பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நாடக மேடை நினைவுகள்


நாடக சபையொன்றை ஏற்படுத்தி அதில் நடிக்கவேண்டுமென்று பெருங்கவலை கொண்டிருந்த நான், அந்த எண்ணத்தை ஈடேற்றுவதற்கு முதல் பிரயத்தனமாக, வேறுவகை யொன்றும் காணாதவனாய், மானியர்வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “சகுந்தலா” என்னும் நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். இந்த வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் எனது பால்ய சிநேகிதர்;அவர்குடும்பத்தாரும் என்குடும்பத்தாரும் மதுரையிலிருந்த பொழுது மிகவும் அந்யோந்யமாகப் பழகினவர்கள்; ஆகவே இவருக்குத் தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு நன்றாய்த் தெரியும். அதனால் அவர்பல்லாரி சரச வினோத சபையைப் போல் சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்கவேண்டி ஒரு சபை கூடப்படும் என்று அச்சடித்த அறிக்கைப் பத்திரிகைகளை எனது இரண்டு மூத்த சகோதரர்களுக்குக் கொடுத்தார்; “நீ இதையெல்லாம் ஏளனம் செய்வாய்” என்று கூறி எனக்குக் கொடுக்கமாட்டேன் என்று மறுத்தார். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட நான், பணத்தைத்தேடிச் செல்லவேண்டுமென்று தீர்மானித்திருந்த ஒருவனுக்கு, அவன் வீட்டிலேயே பெரும் நிதி கிடைத்தது போல் சந்தோஷப்பட்டு, எனக்கும் ஒரு அறிக்கைப் பத்திரிகையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டேன். “நீ அக்கூட்டத்திற்கு வந்து ஏதாவது குறும்பாய்ப் பேசுவாய், உன்னை அழைக்க மாட்டேன்,” என்று பதில் உரைத்தார். (அக்குறும்பு குணம் இன்னும் என்னைவிட்டு முற்றிலும் அகலவில்லை என்றே எண்ணுகிறேன்.) அதன்மீது நானும் அப்படிப்பட்ட சபையொன்று ஏற்படுத்த உத்தேசங் கொண்டிருந்ததைத் தெரிவித்து, அதை மெய்ப்பிக்க வேண்டி, நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த ‘சகுந்தலா’ நாடகத்தையும் காண்பித்தேன். அதனாலும் அவர் சந்தேகம் நீங்கினவர் அன்று. அக்கூட்டத்திற்கு வந்து ஒன்றும் விரோதமாய் நான் பேசலாகாதென உறுதி மொழி வாங்கிக்கொண்ட பிறகுதான் என்னையும் அக்கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார். பிறகு அக்கூட்டத்திற்கு நான் போயிருந்தேன்.

அக்கூட்டம் சென்னையில் மண்ணடிக்கடுத்த ஒரு வீதியில், அக்காலத்தில் ஜாக்கியஸ் (Zacheus) பள்ளிக்கூடம் என்ற பெயரை உடைத்தாயிருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் கட்டிடத்தில்