பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

13


நடைபெற்றது. சுமார் முப்பது அல்லது நாற்பது பெயர்தான் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கப்படுமுன், அன்றுதான் முதல் முறை, அந்நாள் முதல் இந்நாள்வரை எனது நண்பராயிருக்கும் த. ஜெயராம் நாயகரைக் கண்டேன். எங்கள் பொது நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடு, எங்களிருவரையும் ஒருவருக்கொருவர் இன்னாரெனத் தெரிவித்தார். கூட்டத்திற்கு அக்கிராசனாதிபதியாக ம-ள-ள-ஸ்ரீ (தற்காலம் திவான்பஹதூர் என்கிற கௌரவப்பட்டம் பெற்ற), பி.எம். சிவஞான முதலியார் பி.ஏ.பி.எல். வீற்றிருந்தார். அமிர்தலிங்கம் பிள்ளை பி.ஏ. என்பவரும், இன்னும் ஒன்றிரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில், சென்னையில் சரசவினோத சபையைப்போன்ற கற்றறிந்தவர்கள் சேரக்கூடிய நாடக சபை ஒன்று உண்டாக்க வேண்டும் என்கிற விஷயத்தைப்பற்றிப் பேசினார்கள். அன்று அக்கூட்டத்தில் பேசிய விஷயங்கள், ஒன்றைத்தவிர மற்றவை, எனக்கு இப்பொழுது ஞாபகத்திலில்லை. எனக்கு இப்பொழுது முக்கியமாக ஞாபகத்திலிருப்பதென்ன வென்றால், அக்கிராசனம் வகித்த முதலியார் அவர்கள், சிறுவர்களாகிய நீங்கள் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்கக் கூடாதென்று எடுத்துப் பேசியதே! “இளங்கன்று பயம் அறியாது"என்னும் பழமொழிக்கிணங்க அந்த உபதேசமானது எங்கள் செவியிற்புகவில்லை. கூட்டத்தின் முடிவில் யார் யார் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்க இஷ்டமுடையவர் களாயிருக்கிறார்களோ, அவர்களெல்லாம் மேஜையின் பேரில் வைத்திருக்கும்காகிதத்தில் கையொப்பமிடலாம் என்று தெரிவிக்கப்பட, எனது நண்பர் ஜெயராம் நாயகர்முதலில்கையொப்பமிட்டார். எனக்கு ஞாபகமிருக்கிறபடி நான் இரண்டாவது கையொப்பமிட்டேன். இக்காரணம் பற்றி அன்று முதல் இன்றுவரை ஜெயராம் நாயகர் அவர்கள் சுகுண விலாச சபைக்கு முதல் அங்கத்தினராகக் கௌரவப்படுத்தப்பட்டு வருகிறார்.

மேற்கண்ட கூட்டம் கூடிய இரண்டு மூன்று தினங்களுக்கெல்லாம், 1891 ஆம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி, மேற்குறித்த லிகிதத்தில் கையொப்பமிட்ட எழுவரும் சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிப்பதற்காகத் தம்பு செட்டி வீதியில் ஜெயராம் நாயகருடைய தகப்பனார் வீட்டில் ஒரு கூட்டம் கூடினோம். அன்று அச் சிறு கூட்டத்திற்கு என்னை அக்கிராசனம் வகிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்; அங்ஙனமே செய்தேன். அன்று மாலை சுமார் 6 மணிக்கு