பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நாடக மேடை நினைவுகள்


சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அதற்கு ‘சுகுண விலாச சபை’ யென்று நாமதேயம் வைக்கவேண்டுமென்றும் தீர்மானித்தோம். எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் ‘சுகுண’ என்கிற வார்த்தை அப்பெயரில் இருக்க வேண்டுமென்று பிரேரேபித்தவர் ஊ. முத்துக் குமாரசாமி செட்டியார்; ‘விலாசம்’ என்ற பதம் அடங்கியிருக்க வேண்டுமென்று பிரேரேபித்தவர் சம்பத்து செட்டியார். இக் கூட்டத்தில்தான் முத்துக்குமாரசாமி செட்டியாரும் வெங்கடகிருஷ்ண பிள்ளை யென்பவரும் எனக்குப் பரிச்சயமானார்கள். இக்கூட்டத்தில் முத்துக்குமாரசாமி செட்டியார், வெங்கடகிருஷ்ண நாயுடு, வெங்கடகிருஷ்ணப் பிள்ளை , ஜெயராம் நாயகர், நான் ஆகிய ஐவரும் சபையின் காரியங்களைப் பார்க்க நிர்வாகச் சபையாக ஏற்படுத்தப் பட்டோம். முத்துக்குமாரசாமி செட்டியார் காரியதரிசியும் பொக்கிஷதாரருமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சுகுண விலாச சபையை மேற்கண்டபடி ஸ்தாபித்த எழுவரும் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் வாசித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், அல்லது அப்பொழுதுதான் பள்ளியை விட்ட சிறுவர்களாயிருந்தோம் என்பதே. முதல் அங்கத்தினராகிய ஜெயராம் நாயகருக்குச் சுமார் பதினேழு வயதிருக்கும்; பள்ளிக் கூடத்தில் அக்காலத்திலே மெட்ரிகுலேஷன் (Matriculation) என்று சொல்லப்பட்ட பரீட்சைக்குக் கிறிஸ்துவ கலாசாலை எனப் பெயர் வழங்கிய பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார். இவர் பூவிருந்தவல்லியில் டிஸ்டிரிக்ட் முன்சீப் வேலையிலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்ட ம-ள-ள-ஸ்ரீ செல்லப்ப நாயகர் அவர்களுடைய கடைசி குமாரர். வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் மதுரையில் நட்சத்திரங்களின் நிலையைக் கணிக்கும் ஆபீசில் இருந்த சேஷாசலம் நாயுடு என்பவரின் குமாரர். எல்.எம்.எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்காகச் சென்னையில் வைத்தியகலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். வெங்கட கிருஷ்ணப்பிள்ளை என்பவர் ஜெயராம் நாயகருடைய பந்து; முதல் எல்.எம்.எஸ்.பரீட்சையில் அப்பொழுதுதான் தேறி, இரண்டாவது எல்.எம்.எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்கு சென்னை வைத்திய கலாசாலையில் படித்துக் கொண்