பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

நாடக மேடை நினைவுகள்


என்று கூறி விடையளித்தனர்; என் தாயார் மாத்திரம் சற்றே வெறுப்புடையவர்களாய் “வேஷமா நீ போட்டுக் கொள்கிறது!” என்று கூறினார்கள். அவர்கள் தெருக்கூத்துகளைத்தவிர வேறு நாடகங்களைப் பார்த்தவர்களல்ல. ஆகவே அம்மாதிரி இருக்கக் கூடாதென்று கூறினர் போலும். ஒருக்கால் அவர்கள் ஜீவந்தராயிருந்து நான் நாடக மேடையில் வேஷம் தரித்து ஆடுவதை ஆட்சேபணை செய்திருந்தால், என் வாழ்க்கை யானது எந்த விதத்தில், எப்படி மாறியிருக்கும்? நான் தமிழ் நாடகங்களை எழுதுவதை விட்டு வேறேதாவது செய்திருப்பேனா? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் யாரால் கூற முடியும்? என்னால் கூறமுடியாது; என்னைப் படைத்த பரமனுக்குத்தான் தெரியும்!

துக்க சாகரத்தில், இனி ஏது பிழைப்பது என்று அமிழ்ந்திருந்த என்னைக் கைகொடுத்துக் கரையேற்றிய கடவுளின் கருணையானது, அத்துக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவும் வழி கற்பித்தது; அதாவது என் மனத்தை ஏதாவது படிக்கும் வேலையிலோ, எழுதும் வேலையிலோ, செலுத்தும்படி உந்தியது. இப்பொழுதும், ஏதாவது பெருந் துயரங்கள் எனக்குச் சம்பவிக்கும்பொழுது, இம் மார்க்கத்தையே பற்றுக் கோடாகக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். இதன்படி அச்சமயம், முன்னமே ஆரம்பித்து, என் பரீட்சையின் பொருட்டு எழுதுவது தடைப்பட்டிருந்த சகுந்தலை நாடக மொழிபெயர்ப்பை, மறுபடியும் தொடங்கினேன். அன்றியும் ஷேக்ஸ்பியர் மஹாகவியின் நாடகங் களைப் படிக்க ஆரம்பித்தேன்.

மேற்சொன்ன பெரும் துயரம் இக்காரணங்களினால் கொஞ்சம் குறைய, மறுபடியும் சபைக்குப் போக ஆரம்பித்தேன். சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் என்பவர், சபையின் கூட்டங்களுக்கு வந்து போய்க் கொண்டிருந்தால் உனக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருக்குமே என்று சொல்லியனுப்பினார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்கி ஒரு ஞாயிற்றுக்கிழமை சபையின் கூட்டத்திற்குப் போனேன். அங்கு நான் அன்றைத்தினம் கண்டது என் மனத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கொஞ்சம் வெறுப்பையும் விளைத்தது.