பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

23


மின்னலைக் கண்டு கண் பொட்டையானவன், பின் தாங்கி கண்களை நிமிட்டிக்கொள்வதுபோல் அபிநயிப்பார்! இது அக்காலத்தில் வயிற்றை வளர்க்க நாடகங்கள் ஆடி வரும் எல்லாக் கம்பெனிகளிலும் சாதாரண வழக்கம் என்பதைப் பிறகுதான் அறிந்தேன். ஒத்திகை ஒருவாறு எட்டுமணிக் கெல்லாம் முடிந்தவுடன், அங்கிருந்த புதிய அங்கத்தினர்க்கெல்லாம், முத்துக்குமாரசாமி செட்டியார், ஜெயராம் நாயகர் முதலியவர்களால் தெரிவிக்கப்பட்டேன்.

அன்றிரவு நான் வீட்டிற்குப் போனவுடன் மேற்குறித்த ஆபாசங்களை யெல்லாம் எப்படித் தவிர்ப்பது என்று யோசித்தேன். மறுநாள் நிர்வாக சபையின் அங்கத்தினராகிய எனது நண்பர்களைச் சாயங்காலம் சந்தித்தேன். அவர்களுடன் எனது நியாயங்களை யெல்லாம் எடுத்துக்கூறி, பின்பாட்டை விட்டுவிட வேண்டுமென்று அவர்களும் ஒப்புக்கொள்ளும் படி செய்தேன். பின்பாட்டென்பது பழைய காலத்து வழக்கமாயினும் தற்காலத்திய நாகரிகத்திற்கு அது பொருந்திய தல்லவென்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆயினும் நாடகமாடும் பொழுது பக்க வாத்தியத்துடன், தாளமும் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று அவர்கள் கூறினார்கள். அதன்மீது அவர்கள் அறியாதபடி இதற்கு ஒரு யுக்தி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். ஒன்றிரண்டு ஒத்திகைகள் பொறுத்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு நாள் ஒத்திகை முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்குப் போன பிறகு மெல்ல, அங்கு வைத்திருந்த இரண்டு ஜதை தாளங்களையும் வீட்டிற்குத் திருடிக்கொண்டு போய்விட்டேன்! எனது சுயலாபத்தை நாடவில்லை என்பதுதான் இதற்குச் சாக்காகும். இல்லாவிட்டால் இது என்னை இந்தியன் பீனல்கோட் (Indian Penal Code) குற்றத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்! மறு ஒத்திகைக்கு வழக்கத்தைப் போல் சென்று மற்றவர்களுடன் உட்கார்ந்திருந்தேன். சங்கீதம் ஆரம்பிப்பதற்காகப் பக்கவாத்தியங்கள் சித்தமானவுடன், தாளங்களைக் காணோம் என்று எல்லோரும் தேட ஆரம்பித்தார்கள். கோழித் திருடி கூடக்குலாவினாள் என்பது போல், நானும் அவர்களுடன் தேடினேன்! என் வீட்டில் ஒளித்து வைத்திருந்த தாளங்கள் அங்கே எப்படி அகப்படும்? கொஞ்ச நேரம் தேடி அகப்படாமற் போகவே, “இனி என்ன செய்வது, பிறகு