பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முனைவர் ச. சு. இராமர் இளங்கோ
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை - 600 113

அணிந்துரை

‘தமிழ் நாடகத் தந்தை’ என்றும், ‘நாடகப் பேராசிரியர்’ என்றும், ‘தமிழ் மேடை நாடகத்தின் சேக்சுபியர்’ என்றும் நாடகக் கலைவாணர்களால் போற்றிப் பாராட்டப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. கற்றவர்களால் நாடகக் கலை வெறுத்து ஒதுக்கப்பட்டது. இத்தகைய காலக் கட்டத்தில் பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் துறைக்குள் நுழைந்தார். தமிழ் நாடகத்திற்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் தந்தார். அவர் இதிகாச நாடகங்களையும், புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழில்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். அவர்கள் வரலாறு மற்றும் சமூக நாடகங்கள் நடிக்கத் தூண்டுகோலாக அமைந்தார்.

நாடக நடிகர்களைக் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட வழக்கத்தை மாற்றி, அவர்களைக் கலைஞர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடும் நிலைக்கு உயர்த்தினார். தமிழ் நாடக வரலாற்றில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்து, அவற்றை மேடைகளில் நடித்துத் தமிழ் நாடகத்திற்கு ஒரு புது வடிவத்தைத் தந்தார். அவர் காலத்துத் தமிழ் நாடகங்களில் பாடல்கள் அதிகமாக இருந்தன. அத்துடன் பாடல்களின் விளக்க உரையாடல்கள் மிகவும் குறைந்த அளவில் இடம் பெற்றிருந்தன.

பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களைப் படைத்தார்.

நாடகக் கலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பம்மல் சம்பந்த முதலியார் 9.2.1873இல் சென்னையில் பிறந்தார். மாநிலக் கல்லூரியிலும் பின்னர்ச் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார். 24.9.1967இல் மறைந்தார்.

பம்மல் சம்பந்த முதலியார், நாடகத்திற்கு ஆற்றிய தொண்டு தமிழர்கள் என்றும் நினைவில் வைக்கத் தக்கது. கற்றவர்களும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தமிழ் நாடகத்தைப் பார்க்க மாட்டார்கள் என்ற கருத்து பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களால் மாற்றம் பெற்றது. உயர் குடியில் பிறந்தவர்களையும் புகழ் பெற்ற அரசியல்வாதிகளையும், அறிஞர்களையும் பம்மல் சம்பந்த முதலியார் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்