பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

25


இதைக் கேட்டவுடன் எனக்கு நகைப்பு வந்து, “இந்த ராஜா என்ன, மழை பெய்கிறதும் பெய்யாததும் அறியாதவராய் அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறவரா?” என்று கேட்டேன். இம்மாதிரியாக அதில் உள்ள குற்றங்களை எடுத்துக்கூறி ஏளனம் செய்யவே, எனது நண்பர்களுக்குக் கோபம் பிறந்து, “எல்லாவற்றிற்கும் ஏதாவது குறை கூறுகின்றாயே, குற்றமில்லாதபடி நீதான் எழுது” என்று என் மீது திரும்பினார்கள். இது தென்னாலிராமனுடைய கதைகளில் ஒன்றைப் போலிருந்தது. தென்னாலிராமனிடம் ஒருவன் ஒருநாள் “அப்பா, உன் தந்தைக்கு நாளை சிரார்த்தம்” என்று கூறினானாம். அதற்கு அவன் “ஆனால் அந்த சிரார்த்தத்தை நீதான் செய்ய வேண்டும்” என்று கூறினானாம். “ஏனடா, அப்பா! உனது தந்தையின் சிரார்த்தத்தை நான் ஏன் செய்ய வேண்டும்?"என்று கேட்க, “நீ தானே எனக்கு ஞாபகப்படுத்தினாய், அக்காரணத்தினால் நீதான் செய்ய வேண்டும்” என்று பதில் உரைத்தனனாம்! அம்மாதிரியாக மற்றவர்கள் எழுதிய நாடகத்திலுள்ள குறைகளை எடுத்துக் கூற, குற்றமில்லாத நாடகமாய் எழுதும்படி நான் கேட்கப்பட்டேன். அதன்மீது இளங்கன்று பயமறியாது என்றபடி, கஷ்டத்தை அறியாதவனாய் “ஆகட்டும்” என்று வீம்பாய் ஒப்புக்கொண்டேன். அக்காலத்தில் என்னிடம் அறியாமை எவ்வளவு குடிகொண்டிருந்ததோ, அவ்வளவு வீம்பும் இருந்தது.

அன்றிரவு வீட்டிற்குப் போனவுடன், என்னடா இப்படி அகப்பட்டுக் கொண்டோமே என்று கவலைப்படலானேன். “எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு” என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய திவ்ய வாக்கு ஞாபகம் வந்தது. அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்த்திராத நான், எப்படி தமிழில் நூதனமாக நாடகம் - எழுதுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு ஒரு யுக்தி தோன்றியது. அன்றிரவு வழக்கப்படி என் தகப்பனாருடன் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது நிர்வாக சபையில் நடந்ததை யெல்லாம் கூறி, “இந்த சங்கடத்திற்கு என்ன செய்வது நான்” என்று கேட்டேன். அப்பொழுது என் தந்தை, “நீ ஏதாவது தமிழ் நாடகத்தை இதுவரையில் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். நான்